நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆய்வரங்கும் தொடர்ந்து மாலை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
யாழ்ப்பாண தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வரங்க நிகழ்வில் 13 ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய முப்பொன் விழா ஆய்வரங்க மலர் வெளியீடும் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தலும் நடைபெற்றன.
பொன்விழா மலரை யாழ். பல்கலைக்கழக மொழியியல் துறை ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி சுபதினி ரமேஸ் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.
இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மாலை நிகழ்வுகள் விழாக்குழு இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் முப்பொன் விழாவை முன்னிட்டு வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலைநிகழ்வில் அபிநயப்பாடல், நடனம், பேச்சு போன்றவற்றுடன் சிறப்பு நிகழ்வாக யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்வை சித்தரிக்கும் “தமிழ் மறைத்தூதன்” நடன அளிக்கையும் மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்கள், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர், பேராசிரியர் கலாநிதி சுபதினி ரமேஸ் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

