நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும் அமலமரித்தியாகிகள் சபை குருக்களுக்கான கூட்டம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சங்க தலைவர் பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலய பங்கு பணிமனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் தொடர்பாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை சிறப்பித்து ஆய்வுமாநாடு ஒன்றை நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1901ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் தமிழுக்கும் மறைக்கும் அளப்பரிய பங்காற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், பிரெஞ்ச் உள்ளிட்ட 72 மொழிகளில் புலமைவாய்ந்த இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி 30க்கும் அதிகமான நூல்களை அச்சேற்றியுள்ளார்.

நல்லூரை தளமாகக்கொண்டு எளிமையான சந்நியாச வாழ்வை இவர் வாழ்ந்தமையாலும் மெய்யியல் ரீதியான இந்து மதத்தினையும் அதன் பாரம்பரியத்தையும் அறிந்திருந்தமையாலும் இவரது கருத்துக்களும் வாழ்க்கை முறையும் அதிகமாக இந்து சமய மக்களால் விரும்பப்பட்ட பின்னணியில் இவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எனவும் அழைக்கப்படுகின்றார்.

இவரது பணியை கௌரவித்து ஜேர்மன் நாட்டில் 1939ஆம் ஆண்டு அஞ்சல் நினைவு முத்திரையும் தொடர்ந்து இலங்கை அரசினால் 1981 வைகாசி மாதம் 22ஆம் திகதி அவரது படத்துடன் கூடிய அஞ்சல் நினைவு முத்திரையும் சிறப்பு முதல் நாள் உறையும் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin