இலங்கை ஆயர் மன்ற தீர்மானத்திற்கு அமைவாக தேசிய திருவழிபாட்டு ஆணையத்தின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட தேசிய திருவழிபாட்டு மாநாடு புரட்டாதி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றுவருகின்றது.

“ஒன்றிப்பின் ஊடான கூட்டொருங்கியக்கத்தின் ஊற்றே நற்கருணை” என்னும் கருப்பொருளில் நடைபெற்றறுவரும் இம்மாநாட்டின் ஆரம்பத்தில் திருப்பலி இடம்பெற்றது.

தொடர்ந்து வத்திக்கான் திருவழிபாட்டு பேராய தலைவர் ஆதர் கருதினால் ரோச் அவர்களின் “ஒன்றிப்பின் ஊடான கூட்டொருங்கியக்கத்தின் ஊற்றே நற்கருணை” எனும் கருப்பொருளிலான சிறப்புரையும், அருட்தந்தை சிசில் ஜோய் பெரேரா அவர்களின் நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள் மற்றும் அருட்தந்தை அன்ரன் சிறியான் அவர்களின் நற்கருணை ஓரு கொண்டாட்டம் என்னும் தலைப்புக்களிலமைந்த கருத்துரைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து குழுக்கலந்துரையாடல், நற்கருணை வழிபாடு, திரைப்பட காட்சிப்படுத்தல் என்பன இடம்பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களால் “நற்கருணை வாழ வேண்டிய மறைபொருள் நற்கருணை ஒன்றிப்பின் ஊற்று” என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டதுடன் பங்கேற்பாளர்கள் பேராலயத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற திருப்பலி, பவனி, நற்கருணை வழிபாடு என்பவற்றிலும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் குருக்கள், துறவிகள், பொதுநிலையினரென 150 வரையானவர்கள் கலந்துகொண்டதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் உள்ளடங்கலாக 15 பேர் பங்குபற்றியிருந்தனர்.

By admin