திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18,19ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்வில் பாணந்துறை, புத்தளம் திருமறைக் கலாமன்றங்களின் நடனங்கள், திருமறைக் கலாமன்ற இளையோர் அவையின் ஒயிலாட்டம், திருமறைக் கலாமன்ற இசைக்கலைஞர் திரு. இ. ஜெயகாந்தன் அவர்களின் மெல்லிசை, இளவாலைத் திருமறைக்கலான்றத்தின் “பாஞ்சாலி சபதம்” நடன நாடகம், யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் “சத்தியவான் சாவித்திரி” இசைநாடகம் போன்ற கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் பேராசிரியர் பாலகைலாசநாத சர்மா, வண.கலைமாணி மீஹாஹயன்துரை சிறிவிமல தேரர், ஆகியோர் கலந்து ஆசியுரைகளையும் வழங்கியிருந்தனர்.
திருமறைக்கலாமன்ற நிர்வாக இயக்குநர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் அவிசாவளை திருமறைக் கலாமன்றம் மற்றும் கலைத்தூது அழகியல் கல்லூரி வழங்கும் நடனங்கள், திருமறைக் கலாமன்றம் கலைஞர்களின் ‘பூதத்தம்பி’ நாட்டுக் கூத்து என்பனவற்றுடன் கலைஞர் கௌரவிப்பும், நாடகப் பயிலக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்கழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
1965ஆம் ஆண்டு அருட்தந்தை மரியசேவியார் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட திருமறைக்கலாமன்றம் 60 ஆண்டுகளை தண்டி இன்றும் எல்லா இன மத மக்களையும் கலையூடாக ஒண்றினைத்து இறைபணியாற்றிவருகின்றது.
யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இம்மன்றம் இலங்கையின் இருபது இடங்களில் பிராந்திய மன்றங்களையும் கனடா, பிரான்ஸ், நோர்வே, லண்டன், அவுஸ்திரேலியாய போன்ற நாடுகளில் சர்வதேச இணைப்பு மன்றங்களையும் தன்னகத்தே கொண்டு தமிழர் மரபுகளையும் தொன்மையான கலை வடிவங்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் உன்னதமான பணியாற்றிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.