திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணிகள் இம்மாதம் 7ஆம் திகதி வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஆரம்பமாகுமென கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற கர்தினால்கள் அவையின் ஜந்தாவது அவைக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன.
திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றி அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் ஒன்பது நாட்களை கொண்ட காலம், கடந்த 4ஆம் திகதி திருப்பலியுடன் நிறைவடைந்த நிலையில் இரண்டுநாள் இடைவெளிக்குப்பின் வைகாசி மாதம் 7ஆம் திகதி புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் கலந்துகொள்ள தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்ட 135 கர்தினால்களும் சிஸ்டைன் கோவிலில் கூடுவர்.
தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் திருத்தந்தையின் தேர்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள் அனைவரும், தான் அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருஅவையின் இவ்வுலகத் தலைவருக்குரிய கடமைகளை விசுவாசமுடன் நிறைவேற்றுவேனெனவும், தேர்தல் தொடர்புடைய விவரங்களையும் அங்கு நடந்தவைகளையும் மிகவும் இரகசியமாக வைத்திருப்பேனெனவும், தேர்தலில் வெளிப்புற தலையீட்டை அனுமதிக்க மாட்டேனெனவும் உறுதிமொழி எடுப்பர்.
இதன்பின் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறியபின், வாக்களிப்பவர்களுக்கு திருஅவையின் நலன்மட்டில் பொறுப்புணர்வு குறித்து ஆன்மீக சிந்தனை வழங்கப்படும்.
தேர்தல் காலத்தில், கடிதம் எழுதுவது, கலந்துரையாடல் மற்றும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வது, மிகவும் அவசரமாக இருந்தாலொழிய அனுமதிக்கப்படாதென்றும் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்களுக்கு பத்திரிகைகளும், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டவைகளாகவே இருக்குமெனவும் இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படடுள்ளது.
திருத்தந்தையின் தெரிவு தொடர்பான செய்தி சிஸ்டைன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புகைப்போக்கியூடாக வெளிவரும் வெள்ளை மற்றும் கறுப்பு புகைகள் ஊடாக வத்திக்கான சதுக்கத்தில் கூடியுள்ளவர்களுக்கும் உலக மக்களுக்கும் அறிவிக்கப்படுவது திருஅவையின் பாரம்பரியமான நிகழ்வாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.