தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேராசிரியர் கலாநிதி வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்த “தமிழ்வேள்வி 2025” நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட “கூவர் அரங்கில்” நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் கூத்துக்கலைக்கு ஆற்றி வரும் பணிகளைக் கௌரவித்து ‘பேராசிரியர் சு. வித்தியானந்தன் நூற்றாண்டு நினைவு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் நாடக கற்கைநெறியின் யாழ் கல்விவலய ஆசிரிய ஆலோசகராக தற்போது பணியாற்றிவருவதுடன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு 40ற்கும் அதிகமான நாடகங்களை எழுதியும் 100ற்கும் அதிகமான நாடகங்களையும் நெறியாள்கை செய்தும் ஏராளாமான நாடகங்களில் முக்கியமான கதாபாத்திமேற்றும் நடித்துள்ளார்.
முக்கியமாக 11 கூத்துக்கள் இவரால் எழுதப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டதுடன் அழிந்துவரும் கூத்துக்கலையின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் பரீட்சார்த்தமான முறையில் கூத்துருவ நாடகங்களான ‘கொல்லீனும் கொற்றம்’ ‘அற்றைத் திங்கள்’ ‘செம்பாத்தாள்’ ஆகியவை இவரால் எழுதப்பட்டு திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டதுடன் அழிந்துவரும் 150 தென்மோடி நாட்டுக்கூத்து பாடல் மெட்டுக்களை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா அவர்களுடன் இணைந்து ஒலிப்பதிவு செய்து ஆவணப்படுத்திய இவர் கூத்துக்கலைக்கு பெரும் பங்காற்றியுள்ளாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.