யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக தேசிய ரீதியிலான சொல்லேருழவு விவாதப்போட்டி யூலை மாதம் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் வழிநடத்தலில் விவாத ஏற்பாட்டு குழு தலைவர் அருட்தந்தை எட்வின்நாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பாடசாலை நுழைவாயிலிலிருந்து விருந்தினர்கள், போட்டி நடுவர்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பாடசாலை கொடியேற்றப்பட்டு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள்
இடம்பெற்றன.

இறுதிப்போட்டியில் “சொல்லேருழவருள் விஞ்சியவர் வள்ளுவரே கம்பரே” என்னும் தலைப்பில் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவ அணியினர் போட்டியிட்டதுடன் கொழும்பு இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் திரு. வேல்நம்பி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அருட்தந்தையர்கள், குருமட மாணவர்கள், ஆசிரியர்ளென பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான அனுசரணையை One Child Foundation அமைப்பு வழங்கியிருந்ததுடன் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை Zoom செயலி ஊடாக நடைபெற்ற இதற்கான ஆரம்ப போட்டிகளில் 23 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin