பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்குவந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளையே வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடு “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என உள்ளதென யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
செம்மணிப் புதைகுழி கிளறிய சில சிந்தனைகள் – என்னும் தலைப்பில் யூலை மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபின் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.
சிவில் சமுக செயற்பாட்டாளர்களால் செம்மணிப்பகுதியில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது இங்கு வருகைதந்து அஞ்சலி செலுத்திய இவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டபின் வெளியிட்டுள்ள கருத்துக்களில் மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச பங்களிப்பைச் சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் 3000 நாட்களைக் கடந்து நடைபெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் 200க்கும் மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாமலே இறந்துவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் போன்ற பாரிய மனித புதைகுழிகளுக்கான பொறுப்புக்கூறா தன்மை, தமிழர்களின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கான தீர்வு வழங்காமை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படாமை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு, வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மைமிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு கிடைக்காமை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவை தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினை சம்பந்தமாக அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலே உள்ளன என்பதை வெளிப்படுத்துவதாகவும் எடுத்துரைத்துள்ளது.
மேலும் இவ்வாறான செயற்பாடுகள் இன அழிப்பின் பல்வேறு பரிமாணங்களென குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது சர்வதேச தலையீடு அவசியமென்பதனையும் வலியுறுத்தியுள்ளது.