சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்ரிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயக பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நினைவாலய நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாடுகளும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், பொதுமக்களென ஆயிரக்கணக்கானோர் கலந்து இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்கள்.

2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து 150 கிலோமீற்றர் தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தால் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 35ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin