யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

உருவச்சிலையை வட மாகாண ஆளுநர் உயர்திரு வேதநாயகன், தமிழ்நாடு அரசு முன்னைநாள் அமைச்சர் கௌரவ நல்லுசாமி ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்துவைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், சமய தலைவர்கள், அரசியல் தலைவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் பிறந்த இவர் 1961ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் தந்தை செல்வாவுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த இவர் இலங்கை அரச படையால் கைது செய்யப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் இருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமிர்தலிங்கத்தின் மரணத்தை தொடர்ந்து தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இலங்கை தமிழரசு கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin