ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் அவர்களின் சித்திரங்களை உள்ளடக்கிய கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி ஆவணி மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி வரை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தினதும், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவினரதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இக்கலைக்காட்சியில் போர்க்காலத்தில் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குரலாக ஒலித்த கத்தோலிக்கக் குருக்களின் கதைகளையும், 2000ஆம் ஆண்டில் வெசாக் தினத்தன்று மட்டுநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மறைக்கல்வி சிறார்களின் கதைகளையும் மீள்நினைவிற்குக் கொண்டுவரும் வகையில், பிரதிமை ஓவியம் எனும் வகைமையினையும் அதற்கான உத்திகளையும் கையாண்டு வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஓவியச் செயற்பாட்டாளரான நிர்மலவாசன் அவர்கள் இதுவரை 14 தனிநபர் காண்பியக் கலைக்காட்சிகளையும், 30 கூட்டுக் காண்பியக் கலைக்காட்சிகளையும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடத்தியுள்ளதுடன், கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி இவரது 15ஆவது தனிநபர் காண்பியக் கலைக்காட்சியாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.