கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கான மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள், கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித், வத்திக்கான் தூதரக துணைத்தலைவர் மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி மற்றும் குருக்களால் வரவேற்கப்பட்டார்.
இவர் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் 18, 19ஆம் திகதிகளில் கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொழும்பு உயர் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாட்டிலும் கலந்து சிறப்புரையாற்றினார்.
அத்துடன் 21ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் கூட்டொருங்கியக்க ஆயர் மாநாட்டு பின்விளைவுகள் தொடர்பாக இலங்கை நாட்டில் பணியாற்றும் குருக்களுடன் கலந்துரையாடியதுடன் இக்கூட்டத்தில் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களிலிருந்தும் 300ற்கும் அதிகமாக குருக்கள் பங்குபற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தனது மேய்ப்புப்பணி விஜயத்தின் போது குருக்கள், துறவிகள், பொதுநிலையினரை சந்தித்து கூட்டொருங்கியக்க செயல்முறையின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் நாட்டில் திருச்சபைக்குள் ஒற்றுமை மற்றும் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.