குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது.
குருநகர் இளைஞர் கலைக்கழக தலைவர் செல்வன் சீசர் குகேந்திரன் அவர்களின் தலைமையில் கலைக்கழக ஆலோசகர் திரு. கிளமென்ட் நெல்சன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைக்கழகத்தின் வைரவிழா ஆண்டு அங்குரார்ப்பணம், கலைநிகழ்வுகள், கலைஞர்களுக்கான கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக குருநகர் புலவர் சந்தியோகு அவர்களின் எழுத்துருவிலும் திரு. அரியநாயகம் அன்று யூலியஸ் அவர்களின் நெறியாள்கையிலும் உருவான “ஜெனோவா” தென்மோடிக்கூத்தும் மேடை ஏற்றப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.
அத்துடன் இந்நிகழ்வில் 15 வருடத்திற்கு மேலான கலைப்பயண அனுபவத்துடன் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தோடு இணைந்து நீண்டகாலம் பணியாற்றி வருகின்ற குருநகர் மண்ணின் இளம் கலைஞர்களான செல்வன். கட்சன் பிறாங் விதுசன் மற்றும் செல்வன். சீசர் குகேந்திரன் ஆகியோருக்கு “கலையியல் செல்வன்” விருதும், யாழ். பல்கலைக்கழக நடனத்துறை வருகை விரிவுரையாளரும் குருநகர் மண்ணின் மைந்தனுமான திரு. அரியநாயகம் அன்று யூலியஸ் அவர்களுக்கு “அண்ணாவியார்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கைலாசப்பிள்ளை சிவகரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. இ. கிருஸ்ணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டனர்.