கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கழகத்தின் அனுசரணையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ் மற்றும் குடும்ப சேவைக்கு பொறுப்பான அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்தமர்வும் நடைபெற்றது.
இக்கருத்தமர்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் மற்றும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் ஆகியோர் கலந்து கருத்துரைகள் வழங்கினர்.
கருத்துரை நிறைவில் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் கத்தோலிக்க குடும்ப சேவை மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தேசிய குடும்ப நல மையத்தின் பணிப்புரையின் ஆரம்பமாக இளவாலை மறைக்கோட்டத்தில் குடும்ப நல சேவை இயக்கம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் குடும்பங்கள், தங்களது பங்குகளில் குடும்ப நல சேவை இயக்கங்களை ஆரம்பித்து, குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் குடும்பங்களுக்கான கருத்தரங்குகள், இளையோருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

