திட்டமிட்ட இன அழிப்பின் ஊடாக இலங்கைத்தீவில் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் புர்வீக கிராமங்களான வெடிவைத்தகல், ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்பூவரசங்குளம், காஞ்சூரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களும், பெரிய கட்டுக்குளம் ஒதுக்குக்காட்டில் 4000 ஏக்கரும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தினால் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளதெனவும் எச்சரித்துள்ளது.
இந்நீர்த்தேக்கத்திற்கு மிக அண்மையாக உள்ள வெடுக்குனாறிமலை பிரதேசத்தினை தொல்லியல் இடமெனக்கூறி தமிழ் மக்களின் வழிபாட்டினை தடைசெய்யும் தொல்லியல் திணைக்களம் இந்த 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போவதற்கு தனது இசைவினை தெரிவித்துள்ளமை தமிழர் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியாக அமைந்துள்ளதென்ற சந்தேகத்தை எழுப்புகின்றதென தமிழர் மரபுரிமை பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் இன்றுவரை அவர்களுக்கு மீளவும் வழங்கப்படாத நிலையில் தமது சொந்த நிலத்தினை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள மக்களிடம், தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திற்காக நாட்கூலிகளாக கையேந்தும் அவல நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது கிவுல் ஒயா திட்டத்தின்கீழ் இது மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதை குறிப்பிட்டுள்ள பேரவை திட்டமிட்ட நில அபகரிப்பையும் வடபகுதியின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றுவதையும் இலக்காக கொண்டே காலத்திற்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசுகள் இக்காய்நகர்த்தலை மேற்கொண்டுவருவதை வெளிப்படையாக அவதானிக்க முடிகிறதெனவும் குற்றம்சாட்டியுள்ளது.
எந்தவொரு தமிழ் பொதுமகனும் பயனடையாத வகையில் தமிழ் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினையும் மீறி தமது திட்டமிட்ட குடியேற்றத்தினை செய்வதற்காக அரசு முனைப்பபுக்காட்டி வருவது நல்லிணக்கத்தை நலிவடையசெய்யும் நடவடிக்கையெனவும் கவலை தெரிவித்துள்ளது.

