கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “கலைத்தூது விருது விழா” ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோ ஜேசி மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டு மற்றும் கனடா திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடா மன்றங்களின் இயக்குனர் திரு. எலியாஸ் அருளானந்தம் அவர்களின் வழிகாட்டலில் கனடா மன்ற தலைவர் திரு. யசிகரன் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரைகளும் கலைநிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.
விருது வழங்கும் நிகழ்வில், கனடா ரொறென்றோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை அமுது ஜோசப் சந்திரகாந்தன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அருட்தந்தை பேனாட் அவர்களுக்கு மனித உரிமை ஆர்வலர் விருதும், சிவசிறீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்களுக்கு ஆன்மீகத்துறையிலும், செல்வன் ரிஸி சிறீஸ்காந்தன் அவர்களுக்கு இசைத்துறையிலும், சிறீமதி கிருபாநிதி இரத்தினேஸ்வரன் அவர்களுக்கு நடனத்துறையிலும், திரு. இரமணீகரன் சண்முகநாதன் அவர்களுக்கு நாட்டுக்கூத்து துறையிலும், திரு. சிவா பஞ்சலிங்கம் அவர்களுக்கு சமூக சேவை துறையிலும், திரு. கிறிஸ்ரியன் இம்மானுவேல் அவர்களுக்கு மன்ற வளர்ச்சிக்காகவும், கனடாவின் மூத்த ஊடகமான “தமிழர் தகவல் சஞ்சிகைக்கு” ஊடக சாதனை விருதும் வழங்கிவைக்கப்பட்டன.
மன்ற ஸ்தாபக இயக்குநர் அருட்தந்தை நீ. மரியசேவியர் அடிகளாரின் நினைவாக இடம்பெற்ற கலைத்தூது விருது வழங்கும் நிகழ்வில் சமய தலைவர்கள், மன்ற அங்கத்தவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

