ஈழத்து கூத்து கலைஞரான ஆசிரியர் கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவாக மன்னார் முருங்கன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த அவருடைய உருவச்சிலையுடன் அமைந்த நினைவிட திறப்புவிழா யூலை மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

‘சாகித்திய முற்றம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்நினைவிடத்தை முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்கள் ஆசீர்வதிக்க மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் உருவச்சிலையை திறந்துவைக்க, வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அவர்கள் மாலை அணிவித்தார்.

அத்துடன் அன்றைய தினம் ‘கலைத்தவசி கலைஞர் குழந்தை அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டு அதன் ஓர் செயற்பாடாக மாதம்தோறும் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் உயர்திரு. பத்திநாதன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முருங்கன் முத்தமிழ் கலாமன்ற உறுப்பினர்கள், உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

கலாபூசணம், கலைமாமணி, நாடக கீர்த்தி விருதுகளுடன், ஆளுநர் விருது, சாகித்ய விருது, திருக்கலை வேந்தன் விருது, தலைக்கோல் விருது, போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றுக்கொண்டு, ஆற்றுகைக் கலைஞர், நாடக எழுத்தாளர், நெறியாளர், எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், இசையமைப்பாளர் என பன்முக ஆற்றல்கொண்ட இவர் கிராமிய, மரபுவழிக் கலைகளை வளர்க்கும் நோக்கில் 1964ஆம் ஆண்டு முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தை நிறுவியதுடன் சமூக நாடங்கள், சரித்திர நாடங்கள், இசை நாடங்கள், இலக்கிய நாடகங்கள், குறுங்கூத்துக்களென 70 நாடகங்களை எழுதியதோடு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

By admin