மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் மதத்தலைவர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்து கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிராக தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் 11ஆவது நாளகிய கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருக்களும் பங்குபற்றியிருந்ததுடன் அன்றைய தினம் மன்னார் நகரப்பகுதியில் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.
தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் 16ஆம் திகதி இன்றைய தினம் வங்காலை தலைமன்னார் பகுதிகளை சேர்ந்த 500 வரையான மக்கள் இணைந்துகொண்டனர்.
அத்துடன் இப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான கலந்துரையாடல் கடந்த 13ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ், அருட்தந்தை ஜெயபாலன் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் உட்பட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.