பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், இலங்கை நாடு முழுவதையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதுடன் மேலும் 350ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவுகளாலும் இல்லிடங்களை இழந்துள்ளனர்.
இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்ததால், முக்கிய சாலைகள் பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன் இலங்கை முப்படைகள், காவல்துறை, தன்னார்வ இளைஞர் குழுக்கள் ஆகியவை படகுகள் மற்றும் உலங்குவானுர்திகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உயரும் நெருக்கடியை முன்னிட்டு, ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க கார்த்திகை 28ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அவசர கால சட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் பேரிடர் மேலாண்மை, நிவாரண நடவடிக்கைகள், மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனிதாபிமான விண்ணப்பத்திற்கு பதிலளித்து, இந்திய அரசு “Operation சாகர் பந்து” என்ற நிவாரணப் பணியை தொடங்கி இதன் கீழ் 53 மெட்ரிக் தொன் அவசர உதவி பொருட்கள் உலர் உணவு, மருந்துகள், கூடாரங்கள், தறப்பாள்கள், சுகாதாரக் பொருட்கள், அவசர சாதனங்கள் போன்றவற்றை விமான மற்றும் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்திய விமானப்படை அவசரப் பொருட்களுடன் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்பு பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
அதே சமயம், இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்கு அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள், கரையோர உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் உதவி செய்து வருகின்றன.
பெருநிலச்சரிவுகளில் புதைந்த குடும்பங்கள், வேகமான வெள்ளம் அடித்து சென்ற வாகனங்கள், உடைந்த பாலங்கள் காரணமாக சிக்கி தவிக்கும் மக்களென நாடெங்கும் தினம் தினம் பல துயரச் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.
மேலும், கால்நடை மற்றும் விவசாயத்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவிலான மனிதாபிமானச் சூழ்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றவும், மீட்பு குழுக்களுடன் ஒத்துழைக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இருந்து கிடைக்கும் உதவியுடன், பேரளவு மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு பணிகள் புயல் தாக்கமடைந்த பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

