இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில வருடாந்த கூட்டத்தொடர் யூலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை நீர்கொழும்பில் அமைந்துள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது.
கிளறேசியன் உலகளாவிய தலைவர் அருட்தந்தை மத்தியு வட்டமட்டம் அவர்களின் தலைமையில் “நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுக்கும் மறைபரப்பாளர்களாவோம்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில் தொடரவிருக்கும் மூன்று வருடகால பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன், இக்கூட்டத்தில் கிளறேசியன் உலகளாவிய தலைவர் அவர்களால் இலங்கை மற்றும் தென்சூடான் மாநிலத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகக்குழு அங்கத்தவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டன.
அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்கள் தலைமைப் பொறுப்பாளராகவும், அருட்தந்தை வின்சன் டி போல் குரூஸ் அவர்கள் பொருளாளர் மற்றும் ஆலோசகராகவும், அருட்தந்தையர்களான தேவராஜன் பீரிஸ் மற்றும் தனுஸ்க சில்வா ஆகியோர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டு பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
இத்தொடரில் இலங்கை மாநிலத்தை சேர்ந்த அனைத்து கிளரேசிய உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.
கிளரேசியன் மறை போதக சபை 1849ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் புனித அந்தோனி மரிய கிளாறட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 72 நாடுகளில் இயங்கிவருவதுடன், 72வது நாடாக ஸ்தாபிக்கப்பட்ட தென் சூடான் நாட்டின் பணிகளை, புனித யோசேவ்வாஸ் மாநிலமான, இலங்கை கிளரேசிய சபையினர், பொறுப்பேற்று செயற்படுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.