யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செய்தி வழங்கிய அங்கிலிக்கன் சபை குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு வழியில்நின்று, தொடரும் இலத்தீன் அமெரிக்க விடுதலை இறையியல், ஆன்மீக அறிவியல் விடுதலைப்பணிகளின் மூலம் இறந்தும் வாழ்கிறாரென குறிப்பிட்டு காலனித்துவ, மேற்குலக மைய உலக ஒழுங்கைகடந்து, விளிம்பு நிலையிலிருந்து அனைத்தையும் நோக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீனத்துவ நாகரிகமயமாக்குதலில் பல பழங்குடி மக்கள் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டனர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு இவ்வரலாற்றுத் தவறுகளுக்காக மன்னிப்பு கோரினார்.
இரு துருவ உலக நோக்கை கடந்து, மேற்குலகு நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்குலகு நாடுகளான சீனா மற்றும் ரஸ்யா முன்வைத்த கருத்தியல்களை கடந்து, தெற்குலகின் ஆதிக்க மைய ஏக நோக்கு சிந்தனைக்கு மாற்றாக, விளிம்புநிலை மைய போக்கை அங்கீகரித்து அதன் பக்கம் நின்றாரெனவும் குறிப்பிட்டார்.
மேற்குலக நவதாராளவாத ஜனநாயகத்தையும், கிழக்குலகின், மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கடந்து, இவ்விரண்டாலும் பாதிக்கப்படும், பலியாக்கப்படும் தெற்குலகை முக்கியத்துவப்படுத்தி, நிலவும் மிகை ஏற்றத்தாழ்வு மைய யதார்த்தத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை தீமைகளை கண்டித்தாரெனவும் திருத்தந்தையின் வாழ்க்கைமுறை, பயணங்கள், செயற்பாடுகள், சிந்தனைப்பகிர்வுகள் அனைத்தும் இதனை வெளிப்படுத்தின என்றும் மேலும் சுட்டிக்காட்டியதுடன் மறைந்த ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் எண்ணத்துக்கேற்ப நடைபெற்ற, திருத்தந்தையின் மடுத்திருத்தலத்துக்கான வருகை இலங்கையின் கொழும்பு மையத்தை கடந்து விளிம்புநிலை நோக்கியதாக அமைந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.