வத்திக்கான் திருவழிபாட்டு பேராய தலைவர் ஆதர் கருதினால் ரோச் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு கிழக்கு மறைமாவட்ட குருக்கள் துறவிகளை புரட்டாதி மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற தலைவரும் திருகோணமலை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் திருப்பலியும் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கருதினால் ரோச் அவர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டார்.

அங்கு குருக்கள் துறவிகளை சந்தித்து கலந்துரையாடிய கருதினால் ரோச் அவர்கள் “கூட்டொருங்கியக்க திரு அவையின் ஒன்றிப்பின் அச்சாரம் நற்கருணை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்புரையை தொடர்ந்து கலந்துரையாடலும் அவருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர்களும் 200ற்கும் அதிகமான குருக்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin