அளம்பில் உப்புமாவெளி, தூண்டாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் திருவிழா திருப்பலியும் யூலை மாதம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன.
உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள், பிற சமயத்தினரென பலரும் கலந்து செபித்தனர்.
1990ஆம் ஆண்டு நிலவிய போர்ச்சூழலினால் வலிகாமம் மயிலிட்டு பிரதேசத்திலிருந்த ஒரு தொகுதி மக்கள் இடம்பெயர்ந்த தூண்டாய் பிரதேசத்திலுள்ள குடியேறினர்.
இமமக்கள் தமது வழிபாட்டிற்கென ஒரு ஆலயத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இவ்வாலயத்திற்கான கட்டுமானப்பணிகளை 2024ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பித்தனர்.
இவ்வாலய கட்டுமான பணிக்கான நிதி உதவியை யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் வழங்கியிருந்ததுடன் பெருமளவு நிதியுதவியை பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு. கிறிஸ்ரி அருள்ஞானம் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.