மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு தை 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து இரங்கல் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அருட்தந்தையுடன் கொல்லப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
யுத்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து, கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுவந்த வங்காலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்கள் 1985ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி இலங்கை இராணுவப்படையினரால் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

