அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 2025ஆம் ஆண்டு மார்கழி மாதம் நியமனம்பெற்ற அருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆயர் பேரருட்தந்தை நொபேட் அந்த்ராடி அவர்களின் தலைமையில் அனுராதபுரம் புனித சூசையப்பர் பேராலயத்தில் இடம்பெற்ற இத்திருச்சடங்கில் பதுளை மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை வின்ஸ்ரன் பெர்னான்டோ, காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க, மல்கம் கருதினால் ரஞ்சித், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித், மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ, ஏனைய மறைமாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.
இன்றைய தினம் புதிய ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட பேரருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்கள் தனது மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் மெய்யியலில் முதுமானிப்பட்ட படிப்பை இத்தாலி உரோமாபுரியில் அமைந்துள்ள ஆஞ்சலிக்கும் பல்கலைக்கழகத்திலும் பயின்று 2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவர் நற்கருணைநாதர் சபை நிதியாளர் மற்றும் முதல்வராகவும் மாத்தளை புனித தோமையார் ஆலயம் மற்றும் புனித பிலிப்பிநேரியார் ஆலய பதில் பங்குத்தந்தையாகவும், உதவி நவசன்னியாச அதிபராகவும், கங்வெல்ல நவசன்னியாச அதிபராகவும், பெற்றா குழுமத்தின் நிதியாளராகவும் கங்வெல்ல எய்மாட் கம்பெல் ஆன்மீக பயிற்சி இல்ல இயக்குநராகவும், கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியல் பாட விரிவுரையாளராகவும், கண்டி அம்பிடிய நற்கருணைநாதர் சபை குருமடத்தின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

