அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மீண்டும் நியமனம் பெற்றுள்ளார்.

1989ஆம் ஆண்டு யாழ். கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபையின் சிறிய குருமடத்தில் இணைந்து கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கல்வியையும் கற்ற இவர் உரோமபுரி கிறகோரியன் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்கையையையும் உயர்கல்வியையும் நிறைவுசெய்தார்.

1999ஆம் ஆண்டு உரோமாபுரியில் திருத்தொண்டராக நியமனம்பெற்று 2000ஆம் ஆண்டு மன்னாரில் அமலமரித்தியாகிகள் சபை குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் பண்டாரவளையில் தனது நவசந்தியாச வாழ்வில் ஈடுபட்டதுடன் கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் இல்ல உருவாக்குநராகவும், வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும், வவுனியா வைத்தியசாலை ஆன்மீகக் குருவாகவும்,
கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளராகவும், கோப்பாய் கல்வியற் கல்லூரி ஆசிரியராகவும், நோர்வே தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மன்னார் அமலமரித்தியாகிகள் சபை ஞானோதய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் 2023ஆம் ஆண்டிலிருந்து அமலமரித்தியாகிகளின் சபை யாழ். மாகாண முதல்வராக பணியாற்றிவந்த அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாகவும் மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin