இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “அபேதம்” (Abhedam) சமாதானக் கண்காட்சி மாசி மாதம் 01அம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஆதரவில், யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையம் மற்றும் நாவாந்துறை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குகயாழினி அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் பல குறிப்பிடத்தக்க ஓவியங்களும், சிற்பங்களும், விளக்கச் சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பல்வேறு இனக் குழுக்களிடையே, குறிப்பாக வடக்கு – கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியத் தமிழர்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்து, மனித மாண்பு, சமத்துவ வாய்ப்பு, பல்வகைமைக்கு மரியாதை அளிக்கும், இவ்அறக்கட்டளையின் தொலைநோக்குப் பார்வையின்படி வாழ இனக்குழுக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி ரத்தினபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள “சமாதானக் காட்சியகம்” Peace Gallery என்ற நிரந்தரக் கண்காட்சி, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் நல் முயற்சிகளில் ஒன்றாகுமென்பதுடன் இக்கண்காட்சியை ஒழுங்குபடுத்த உதவிய ஒஸ்மானியா கல்லூரியை அண்டிய பகுதியில் இயங்கும் யாழ்ப்பாண மகளிர் மேம்பாட்டு மைய உருவாக்கத்தில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin