யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.
இந்நாளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கேட்போர்கூடத்தில் ஆயர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
குருக்கள் துறவிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். யாழ்.மறைமாவட்டத்தின் 4ஆவது சுதேச ஆயராக 2015 ஆம் ஆண்டு பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு அளப்பரிய பணிகளை ஆயர் அவர்கள்ஆற்றிவருகின்றார். பங்குப்பணி, ஆசிரியப்பணி, நிர்வாகப்பணி என பல தளங்களிலும் பணியாற்றி மக்களை வழிநடத்திச் செல்லும் ஆயருக்கு யாழ் மறை அலை தொலைக்காட்சி குழுமம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஆரம்பகர்த்தாவாகவும் யாழ் மறை அலை இணையத்தள தொலைக்காட்சியின் வழிநடத்துனராகவும் ஊடக துறையில் யாழ் மறைமாவட்டம் தனக்கே உரிய தனித்துவமான இடத்தை பெற்றுக்கொள்ள ஆயர் அவர்களே வழி அமைத்து தந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin