புனித வின்சென்ற் டி போல் திருவிழா 27.09.2021 கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புனித வின்சென்ற் டி போல் தேசிய சபை ஆன்ம இயக்குனரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக அன்றைய தினம் மாலை 7.00மணியிலிருந்து 7.30மணிவரை இலங்கையிலுள்ள அனைத்து வின்சென்தியர்களும் ஒன்றாக இணைந்து ஆன்மீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொடிய தொற்று நோயிலிருந்து மக்கள் அனைவரும் விடுபடவும், அருளாளர் பிரெற்றிக் ஓசானம் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவும், ஆயுதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் வின்சென்தியர்களின் பணிகள் சிறப்புற அமைய வேண்டியும் இவ் ஆன்மீகப் பிரார்த்தனை நடைபெற்றது.

யாழ் மறைமாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து பந்திகளும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் தத்தமது பங்கில் ஆர்வத்தோடு இவ் ஆன்மீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அருளாளர் பிரெற்றிக் ஓசானம் அவர்கால் புனித வின்சென்ற் டி போல் சபை 1833ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று இச்சபை உலகில் 151 நாடுகளில் 80,000 பந்திகளாக எட்டு இலட்சம் (800,000) உறுப்பினர்களைக் கொண்டு 35 மில்லியனிற்கு அதிகமான ஏழை எளியவர்களுக்கு பணிகள் ஆற்றிவருகின்றது.இலங்கையில் முதன்முதலில் யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இச்சபை அருட்சகோதரர் இயூஜின் குருசோ அவர்களினால் புனித சூசையப்பர் பந்தியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய மறை மாவட்டங்களிலும் இச்சபை உருவாக்கப்பட்டது.தற்போது யாழ் மறை மாவட்டத்தில் மத்திய சபையின் ஆன்ம குருவாக அருட்திரு நேசநாயகம் அவர்கள் செயற்பட்டு வருவதுடன் 32 வளர்ந்தோர் பந்திகளும் 4 இளையோர் பந்திகளுமாக 36 பந்திகள் 400 அங்கத்தவர்களைக்கொண்டு இயங்கிவருகின்றது.புனித வின்சென்ற் டி போல் தேசிய சபை புனித வின்சென்ற் டி போல் மறைமாவட்ட மத்திய சபைக;டாக இடர்கால நிதியுதவி, கல்வி நிதி உதவி, இணைப்பு நிதி செயற்திட்ட உதவிகள், மற்றும் மருத்துவ நிதி உதவிகள் எனப் பல்வேறு உதவிகளை பந்திகளுக்கு வழங்கின்றது. சிறப்பாக இவ்வாண்டு புனித வின்சென்ற் டி போல் விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மத்திய சபை, ஒவ்வொரு பந்திக்கும் விசேட நிதியாக 20,000 ரூபா பணத்தை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin