கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அடைக்கல அன்னை ஆலயம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஊடாக யாழ். புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்தது.

இப்பேரணி சென்ற ஆலயங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் நற்கருணை ஆசீரை வழங்கியிருந்தார்.

அத்துடன் ஊர்காவற்றுறை பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற பவனி புனித பரலோக அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அந்தோனியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், புனித யாகப்பர் ஆலயங்கள் ஊடாக மீண்டும் பரலோக அன்னை ஆலயத்தை வந்தடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.

மேலும் சாட்டி பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்
இடம்பெற்ற பவனி சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் ஆரம்பமாகி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்து அங்கு நடைபெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.

அத்துடன் முல்லைத்தீவு பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற பவனி கள்ளப்பாடு அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித கப்பலேந்தி அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.

இப்பேரணிகளில் ஏராளமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin