யாழ். தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை திறப்புவிழா 31ஆம் திகதி செவ்வாய்கிழமை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரியப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து பாடசாலைக் கட்டடத்தை ஆசீர்வதிக்க இத்தாலி உரோமபுரியிலிருந்து வருகைதந்திருந்த புனித கபிரியேலின் மென்போர்ட் அருட்சகோதரர்கள் துறவறசபை மேலாளர் அருட்சகோதரர் யோன் கல்லறக்கல் அவர்கள் நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இந்தியா நாட்டு திருச்சிமாகாண முதல்வர் அருட்சகோதரர் இருதயம் அவர்களும் அவர்களுடன் இணைந்து ஏனைய மாகாண முதல்வர்களும் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர், அரசியல் பிரமுகர்கள், வலயக்கல்வி உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள் குருக்கள், துறவிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை விசாலமான வகுப்பறைகளுடன் நவீன வசதிகளை உள்ளடக்கி நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆயர் அவர்களினால் இப்பாடசாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பாடசாலையின் கல்விச்செயற்பாடுகள் 2022ஆம் ஆண்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆசீருடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததுள்ளது. இப்பாடசாலையில் தற்போது 150 மாணவர்கள் கல்விகற்று வருவதுடன் இந்தியாவை சேர்ந்த 3 அருட்சகோதரர்களும் 5 குளுனி துறவறசபை அருட்சகோதரிகளும் அவர்களுடன் இணைந்து 5 ஆசிரியர்களும் கல்வி கற்பித்து வருகின்றார்கள்.