இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தமர்வுகள் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18,19ஆம் திகதிகளில் நடைபெற்றன.

சமய பாடத்திற்கான வினைத்திறன் மிக்க கற்பித்தலையும் பாடப்பரப்பு சார்ந்த தேடலையும் மேம்படுத்தும் நோக்கில் கத்தோலிக்க ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இருநாட் கருத்தமர்வு மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன் இக்கருத்தமர்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் மற்றும் ஆசிரியர் திரு. ஜெபனேசன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து ஆசிரியர்களை நெறிப்படுத்தினர்.

இக்கருத்தமர்வில் வடமாகாண கல்வி வலய பாடசாலைகளில் கற்பிக்கும் 125 வரையான ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

அத்துடன் உயர்தரப் பரீட்சையில் கத்தோலிக்க பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தமர்வுகள் 19ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்திலும் கிளிநொச்சி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியிலும் நடைபெற்றன.

ஆசிரியர்களான செல்வி விஜி சௌந்தர்யமலர், திருமதி. சுனித்தா வெனான்சியஸ், திரு. பீற்றர் மற்றும் திரு. அனுஸ்ரதாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வுகளில் வடமாகாண கல்வி வலய பாடசாலைகளில் கல்வி பயிலும் 200 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin