‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’2025, யூபிலி ஆண்டின் மையக்கருத்து

2025, யூபிலி ஆண்டின் மையக்கருத்தான ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்ற கருப்பொருளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

திருப்பீடத்தின் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை மேம்படுத்துவதற்கான அவையின் தலைவர் பேராயர் றெய்னோ கசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள், 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசியபோது, வரவிருக்கும் 2025ன் யூபிலி ஆண்டிற்கான விருதுவாக்காகத் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ (Pilgrims of Hope) என்பதை அங்கீகரித்தார் என்று தெரிவித்தார். மேலும், 2025ம் யூபிலி ஆண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்படவேண்டும் என்பதே திருத்தந்தையின் முக்கிய அக்கறையாக இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டிய அவர், மையக்கருத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள், ‘திருப்பயணங்கள் மற்றும் நம்பிக்கை’ ஆகிய இரண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைக் காலத்தின் முக்கிய கருப்பொருள்களைக் குறிக்கின்றன என்றும் எடுத்துரைத்தார். யூபிலி ஆண்டு என்பது அருளின் ஒரு சிறப்புமிக்க ஆண்டாக அமைகிறது என்றும், இது திருஅவையின் விசுவாசிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்த பேராயர் அவர்கள், பாரம்பரியமாக, இது கிறிஸ்துமஸ் விழாவிற்குச் சற்று முன்பு தொடங்கி அடுத்த ஆண்டு திருக்காட்சிப் பெருவிழாவன்று நிறைவடைகிறது என்றும் கூறினார். புனித பேதுரு பெருங்கோவிலில் புனிதக் கதவு திறக்கும் வழிபாட்டுடன், புனித யூபிலி ஆண்டை திருத்தந்தை தொடங்கி வைப்பார் என்றும், அதன் பிறகு, புனித யோவான் இலாத்ரன், புனித பவுல், புனித மேரி மேஜர் ஆகிய பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டு, யூபிலி ஆண்டு நிறைவடையும் வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

Your email address will not be published. Required fields are marked *