எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் திருச்செபமாலை திருயாத்திரை

எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக மரிஅன்னையின் பரிந்துரையை மன்றாடி, இலங்கை ஆயர் பேரவை, மரியன்னையின் மாதமாகிய ஒக்ரோபர் மாதத்தில், நாடளாவிய மெய்நிகர் வழியிலான திருச்செபமாலை திருயாத்திரையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி காலி மறைமாவட்டத்திலுள்ள மாத்தறை மாதா திருத்தலத்தில் ஆரம்பமாகும் இத்திருயாத்திரை, 30ம் திகதி மன்னார் மருதமடுத்திருப்பதியில் நடைபெறும் இறுதிச் திருச்செபமாலைத் தியானத் தொடர்ந்து, ஒக்ரோபர் 31ம் திகதி அனைத்து மறைமாவட்டங்களிலும் ஒப்புக்கொடுக்கப்படும் சிறப்புத் திருப்பலிகளோடு நிறைவுபெறும்.

HOLY MARY, VERBUM தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தள சமூக வலைத்தளங்கள் ஊடாக நடாத்தப்படவிருக்கும் இத்திருச்செபமாலை திருயாத்திரை அனைத்து மறைமாவட்டங்களிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மரியன்னையின் திருத்தலங்களினூடாக ஒக்ரோபர் மாதம் முழுவதும் பயணிக்கவிருக்கின்றது.இத்திருயாத்திரையில் தினமும் வெவ்வேறு திருத்தலங்களிலிருந்து ஒளிபரப்பாகும் திருச்செபமாலைத் தியானத்தில் இறைமக்கள் தத்தம் இல்லங்களிலிருந்து பங்குகொண்டு மரியன்னையின் பரிந்துரையை மன்றாடுமாறு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.அத்துடன் ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி வெள்ளிக்கிழமை, எல்லாக் குடும்பங்களும் உபவாச செபநாளாக அனுசரித்து திருச்சிலுவைப் பாதை தியானத்தைச் செபிக்கும் நாளாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.யாழ். மறைமாவட்டத்தில்; சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலமும், பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை ஆலயமும் இத் திருச்செபமாலைத் தியானத்தை மேற்கொள்ளும் ஆலயங்களாக யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களால் பரிந்துரைக்கப்ட்டுள்ளன.இத்திருயாத்திரை இலங்கை ஆயர் பேரவையின் ஒழுங்குபடுத்தலில் தேசிய திருவழிபாட்டு மற்றும் கத்தோலிக்க ஊடக நிலையங்களும், மறைமாவட்ட திரு வழிபாட்டு மற்றும் கத்தோலிக்க ஊடக நிலையங்களும் இணைந்து நெறிப்படுத்துகின்றன.

Your email address will not be published. Required fields are marked *