யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் (Council) புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன்

யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் ( Council )புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் நியமனம் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான அருட்பணி ஞானமுத்து பிலேந்திரன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாழ் நாள் பேராசிரியர் அருட்பணி ஞானமுத்து பிலேந்திரன் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையில் மிக நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றார். அவர் கத்தோலிக்க குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு புனித பத்திரிசியார் கல்லூரியில் மத்திய பிரிவுக்கும், பத்திரிசியார் கல்லூரி விடுதிக்கும் பொறுப்பாக இருந்த காலத்தில் இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகக் கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியைப் பெற்றிருந்தவர் என்பதுடன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதியாக இவர் பணியாற்றிய காலத்திலேயே இந்து கற்கைகள் பீடத்துக்கான முன்மொழிவு இவரால் கையொப்பமிடப்பட்டு முன்மொழியப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Your email address will not be published. Required fields are marked *