அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் 24-09-2020 வியாழனன்று யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியைத் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றிய ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் குருக்கள் புனித யோண் மரிய வியன்னியைப் போன்று அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றவேண்டுமென அறிவுறுத்தினார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நன்கு அறிந்தவர்களாகவும் இறைவனின் அன்பை அவர்கள் அனுபவிக்கத் துணைபுரிபவர்களாகவும் குருக்களின் பணிகள் அமையவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். குருக்கள் தங்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்றவகையில் அல்லாமல் மக்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்றவகையில் அவர்களை மதிப்புடனும் மாண்புடனும் வழிநடாத்தவேண்டுமென்றும் ஆயர் வலியுறுத்தினார்.திருப்பலியைத் தொடர்ந்து “பசுமையான மறைமாவட்டத்தை நோக்கி” (Towards Green Diocese) என்னும் கருப்பொருளில் சுற்றுச்சூழல் பராமரிப்பு பற்றிய சிறப்புக் கருத்தரங்கு மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி. ப. யோ. ஜெபரட்ணம் அடிகளின் கருத்துரையோடு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் நிறைவில் எமது யாழ் மறைமாவட்டத்தின் எல்லாப் பங்குகளிலும் இறைமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பராமரிப்பு பற்றிய சிறப்புக் கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்வுகளும், செயற்பாடுகளும் உடனடியாக ஆரப்பிக்கப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.எல்லாப் பங்குகளிலும், நிறுவனங்களிலும் இறைமக்களோடு இணைந்து பின்வரும் செயற்பாடுகளை உடனடியாகச் செயற்படுத்த ஆரம்பிக்குமாறு குருக்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்:- சுற்றுச் சூழல் பராமரிப்பு பற்றிய செப வழிபாடுகளை அன்பியங்களில் நடாத்துதல்- மறை உரைகளில் இதன் அவசியத்தை வலியுறுத்தல்.- இதற்கென திரு அவையால் தரப்பட்ட செபமாலைத் தியானங்களைச் செபித்தல்.- இயற்கையோடு இணைந்த தியானங்களை நடாத்துதல்.- ஆலயங்கள், பங்குமனைகள், வீடுகளில் பிளாஸ்ரிக் பொருட்கள் பாவனையை முற்றாக தவிர்த்தல்.- கடதாசிப் பைகள் மற்றும் துணியிலான பைகளை பாவித்தல்.- வீட்டுத் தோட்டங்கள் செய்து உடன் மரக்கறி, உடன் பழ வகைளை உண்ணல்.- பலன் தரும் நிழல் மரங்களை நட்டு வளர்த்தல்.- முடியுமான இடங்களில் பனம் விதைகளை நட்டு பனை மரங்களை வளர்த்தல்.- இயற்கை உரங்களைத் தயாரித்து பயன்னடுத்துதல்.- குடி நீரையும், தண்ணீரையும் வீணாக விரையம் செய்யாதிருத்தல்- ஒருமுறை பாவித்து எறியும் கலாச்சாரத்தை நிறுத்துதல்.- மீள் பயன்பாடுள்ள பொருட்களைப் பாவித்தல்.- கொண்டாட்டங்களில் வீண் விரையங்களைத் தவிர்த்தல்.- நினைவு நிகழ்வுகளின்போது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை வழங்கல்.- அசுத்தமான சுற்றாடல்களை சிரமதானம் செய்து தூய்மையாக்குதல்.- பாதீனியம் போன்ற பூண்டுகளை அழித்தல்- வளவுகளை திறந்த மண்பரப்புக்களாகப் பராமரித்தல்.- பொது இடங்களை அழகாகப் பராமரித்தல்.- அவசியமற்ற பொருட்களை வாங்காதிருத்தல்.- இயன்றவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தல்.- துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தல். – குறுகிய தூரங்களுக்கு கால் நடையாகச் சென்று வரல்.- மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துதல்இக்கருத்தரங்கைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுகள் அனைத்தையும் குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்பணி. பெ. பெனற் அடிகளாரும் நிர்வாக அங்கத்தவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Your email address will not be published. Required fields are marked *