இப்பதிவு வெறும் கற்பனையுமன்று உண்மையுமன்று. ஈழப்போரின் இறுதி நாட்கள் பற்றி பக்கச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் நூல்கள் மூலமாகப் பெற்ற தரவுகள் இதன் பின்புலமாக அமைகின்றன.
இறைமகன் இயேசுவின் அடியவனாக இறுதி மூச்சு வரை தனது அழைப்பின் கசப்பான காடியைக் குடித்து தனது வாழ்வு முழுவதையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்து, தன்னை நம்பியிருந்த மக்கள் ஒவ்வொருவரிலும் இறைவனின் திரு உருவைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய வேளையில் அருகில் இருந்து தன் அழைத்தலுக்குச் சான்று பகரத் தன் இன்னுயிரை நீத்து யாழ். மறைமாவட்ட அருட்பணித் தியாகச் செம்மல்கள் வரிசையில் இடம் வகிக்கும் அமரர் சராவின் உள்ளத்தில், போரின் இறுதிக் கட்டத்தில், எழுந்து அலைமோதிய எண்ணத் திவலைகள், சிந்தனைக் கீற்றுகள் எவை எவையாக இருந்திருக்கும் என்னும் ஊகத்தில் இக்கட்டுரை வரையப்படுகின்றது. எவருடைய உள்ளத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை; எப்பிரிவினரையும் குற்றம் சாட்டும் எண்ணமும் இல்லை.
நீ. மரிய சேவியர் அடிகள்

இடம்: முள்ளிவாய்க்கால்
சூழல்: பல திங்கள் பதுங்கு குழி வாழ்க்கை 
காலம்: 2009 மே திங்கள் 17ம் நாள்

நேரம்: பிற்பகல் 2.45 மணி

மக்கள் நடமாட்டம் எவ்வளவோ குறைந்துவிட்டது. எங்கும் துப்பாக்கி வெடி ஓசைகள் அபசுரங்களாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவு இன்றி பசியாய் இருந்த களைப்பு என்னை மட்டுமன்றி, என்னுடன் உள்ள எல்லோரையயுமே வாட்டி வதைக்கின்றது. எமது பதுங்கு குழியை விட்டு வெளியே செல்ல முனைகின்றோம். முடியவில்லை! விடாமுயற்சியின் பலனாக எம்முடன் இருந்த ஒரு சில இளைஞர் வெளியே தவழ்ந்து தவழ்ந்து செல்கின்றார்கள். அவர்கள் மீள வரும் பொழுது, காலைக்கடன் முடிக்கச்சென்ற வேளை நெற்றியில் குண்டு பட்டு இறந்து போன இளவாலை விளானை சேர்ந்த ஓர் இளைஞனின் உடலையயும் இழுத்து வந்து எமது பதுங்கு குழி அருகிலிருந்த ஒரு கிடங்கில் போட்டு மூடுகிறார்கள்.

பிற்பகல் 3.00 மணி

எமது பதுங்கு குழிக்கு அருகில் இன்னும் ஒரு குழியிலிருந்த இருவர் எம்முடன் வந்து, “இனி நாங்கள் என்ன செய்யலாம்?” என கேட்கின்றார்கள். “குருக்களாகிய உங்களை நம்பித் தான் நாங்களும் அருகில் இருக்கிறோம்” எனக் கூறுகின்றனர். அச்சம் ஒரு புறமும் செய்வதறியாது நிற்கும் திகைப்பு மறுபுறமும் உடல் பசியிலிருந்த அவர்களது உள்ளங்களை எம்மிடம் ஆறுதல் தேட வைத்தன. அவல நிலையில் உள்ளவர்க்கு ஆன்மீகம் துணைநிற்கும் என்பதை உணர்கின்றேன். எம்முடைய மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் இயேசுவின் அரவணைக்கும் அன்புக்குச் சான்று பகரும் அருளை எனக்கு இறைவன் அளித்ததிற்கு இக் கல்வாரி களத்திலும் நான் விண்ணகம் நோக்கி நன்றி கூறுகின்றேன். ஆயின், எமது பரிதாப நிலையை மக்கள் நடமாட்டம் எதுவுமில்லாத சூழல் மேலும் வலுப்படுத்துகின்றது. போர்க்களத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் துப்பாக்கி வெடிச் சத்தங்களும் பெரிய குண்டுகளின் நெஞ்சை உதற வைக்கும் ஓசைகளும், நாம் சித்திரவதை முகாம் ஒன்றில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மோசமாகிக் கொண்டு இருக்கின்றது. என்ன கொடுமை! சில நேரத்தில், பாரிய குண்டுகளின் வெடிச்சத்தம் செவிகளை துளைத்து செவிடாக்குவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒவ்வொரு அதிர்வும் இளைத்து போயுள்ள எனது உடலை பாதித்து கொண்டே இருக்கின்றது.

பிற்பகல்: 4.00 மணி

அருட்தந்தை ஒருவரிடமிருந்த சீ.டி.எம்.ஏ தொலைபேசிக் கருவி ஊடாக எமது நிலைமைகளை யாழ் ஆயருக்கும் கொழும்பில் இருந்த ஒரு சில குருக்களுக்கும் தெரியப்படுத்துகிறோம். அவர்கள், முள்ளிவாய்க்கால் படை நடவடிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் படையதிகாரியுடன் தொடர்பை ஏற்;படுத்தி எமது நிலைமையை தெரியப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள். ஒரு சில நிமிடங்களின் பின் அவர்கள் எம்மிடம் தொடர்புகொண்டு தாம் கூறியபடி பொறுப்புப் படையதிகாரியிடம் அனைத்துத் தகவல்களையும் கூறியதாக எமக்குத் தெரிவிக்கின்றனர். அத்தோடு, படையினரை அண்மையில் காண நேர்ந்தால், வெள்ளைக் கொடியுடன் பதுங்கு குழியை விட்டு வெளியே வந்து அவர்களுடன் உரையாடும் படி அறிவுறுத்தல் தருகின்றார்கள். இச்செய்தி சோகத்தில் ஆழ்ந்திருந்த நம்மவருள் பலருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையயும் அளிக்கின்றது.

பிற்பகல்: 5.00 மணி

வெள்ளைக் கொடிகள் ஆயத்தமாகின்றன. ஆயின் யார் யார் வெளியே செல்வது? நீண்ட உரையாடல் தொடர்கின்றது ஈற்றில் ஒரு முடிவுக்கு வருகின்றோம். அன்பகப் பிள்ளைகள் இருவர், சிங்கள மொழியில் பேசக் கூடிய முதியவர் ஒருவர், அருட்தந்தையர்கள் இருவர் ஆகியவர்களுடன் நானும் செல்வதற்கு உடன்பாடு எட்டப்படுகின்றது.

பிற்பகல்: 6.00 மணி

எம்முடன் தங்கி இருந்த ஒரு சிலர், படையினரைக் கனரக ஆயுதங்களுடன் காண்கின்றார்கள். அச்சம் மேலிட்டாலும், பதுங்கு குழியைவிட்டு வெளியே செல்வதற்கான முதலாவது முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வெளியே வருகின்றோம். அப்படி வந்த எமக்கும் படையினருக்கும் சற்றுத் தூரம் இருப்பினும் அவர்களுடன் உரையாட முற்படுகின்றோம் . பதிலாக, அவர்கள் கோபமாக எம்மைப் பேசி துப்பாக்கியால் சுடத் தொடங்குகிறார்கள். நாம் மிக அவதானமாக இருந்தமையால் விரைவாக ஓடி வந்து எமது பதுங்கு குழிக்குள் பாதுகாப்பைத் தேடிக்கொள்கின்றோம். உயிருக்குப் போராடும் வேளையில் நமது கையில் உள்ள தொலைபேசி இறைவன் நமக்கு அளித்த உடன்பாட்டின் பேழை போல் மாறியுள்ளது. 
வானகத் தந்தையே! நன்றி! கோடான கோடி நன்றிகள்… நமது முயற்சி பற்றி தொலைபேசி ஊடாக அப்பகுதியின் படை நடவடிக்கைக்கு பொறுப்பாய் இருக்கும் படைத் தளபதிக்கு அறிவிக்கின்றோம். அதற்கு அவர் கூறிய பதில்: “படையினர் ஒருபோதும் மக்களைக் குறிவைத்துச் சுட மாட்டார்கள் நீங்கள் துணிந்து வெளியே வந்து, படையினரை நோக்கிச் செல்லுங்கள்”. அவ்வார்த்தைகளை நம்பி நாம் வெளியே சென்ற போது படையினர் எம்மை நோக்கி சூடு நடத்தினார்கள் என்பதை அவர் ஏற்கின்றார் இல்லை. இருந்தும், அவர் கூறியதற்கு அமைய நாம் வெளியே வருகின்றோம்.
படையினருடன் உரையாட முனைகின்றோம் . மீண்டும் துப்பாக்கிச் சூட்டின் அச்சுறுத்தல். இம்முறையும் மயிர் இழையில் உயிர் தப்பி பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுகின்றோம்.

இரவு: 7.00 மணி

தொலைபேசி வழியாக பலருடனும் தொடர்பு கொண்டு பேசுகின்றோம் எமக்கு சாதகமான எதுவும் நடக்காது போலும்! இறைவனுடைய சித்தம் அதுவானால் அதுவே நடக்கட்டும்! இருள் அரக்கனுடைய அதர்ம ஆட்சி எல்லா இடமும் எம்மைச் சூழ்ந்து பரவியுள்ளது. பதுங்கு குழிக்குள் வெளியே எதையும் எவரையும் கண்ணாலே பார்க்க முடியவில்லையே! இனி வெளியில் செல்வது தற்கொலைக்கு சமன் என்பது உறுதி. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இரவுப் பொழுது முடிய, நாம் உயிருடன் தப்பி இருந்தால் காலையில் மீண்டும் முயற்சி செய்வோம் என்னும் முடிவினை எடுக்கின்றோம்.

இரவு: 8.00 மணி

முல்லைத்தீவு சிறுவர் இல்லத்துக்குப் பொறுப்பாக இருந்த முகுந்தன் ஆசிரியர் கடுமையான உடல் நலக் குறைவால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். எம்மிடம் எவ்வகையான மருந்தும் எள்ளளவும் கிடையாது. குடிப்பதற்கு நீரும் இல்லை. நீருக்காக வெளியே செல்லவும் இயலாது. வெளியே சென்றால், படையினரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டும் என்னும் அச்சம். 
எமது நிலையோ கையறு அவல நிலையே!.

இரவு: 9.00 மணி

எம்முடன் உள்ள ஒவ்வொருவர் முகத்திலும் களைப்பின் பின்னணியில் சோக ரேகைகள் படர்ந்து காணப்படுகின்றதை என்னுடைய கையில் எரிந்து கொண்டு எவ்வேளையிலும் அணைந்து போகும் நிலையிலுள்ள அரிக்கன் விளக்கின் ஒளியில் காண்கின்றேன். ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்ற பாடல் ஏனோ நினைவுக்கு வருகின்றது.

இரவு: 10.00 மணி

கைக்குண்டுச் சத்தங்கள் எமக்கு மிக அண்மையில் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒரு சிலரின் கூக்குரலும் அச்சத்தங்களுடன் அவைக்கும் மேலாக கேட்கின்றது. எங்களைப் போல் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பிற்கு இருந்த மக்களின் அவலச் சத்தம் என்று எண்ணுகிறேன்.

இரவு: 11.00 மணி

வெடிச் சத்தங்களும் அவல ஓலங்களும் சுடு காட்டை நினைவவுபடுத்துகின்றன. நாம் தங்கியிருந்த பதுங்கு குழிக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒரு வேளை, படையினர் எமது பதுங்கு குழியையும் தாக்கலாம் என்ற எண்ணத்துடன் ஒரு வாயிலில் வயது முதிர்ந்த அம்மா ஒருவரையும், மறு வாயிலில் அருட்தந்தை ஒருவரையும் காவலுக்கு வைக்கின்றோம். தாக்குதல் ஏற்பட்டால் அவர்கள் தம்மை அடையாளப்படுத்துவதற்காகவே அப்படிச் செய்தோம்… பருகுவதற்குத் தண்ணீரின்றி உயிருடன் போராடிக்கொண்டிருந்த முகுந்தன் ஆசிரியரின் மூச்சு சடுதியாக நின்று விடுகின்றது. அவர் சேட்டுமம் இழுத்த படி இறந்து விட்டார். ஓலமிட்டு அழுவதற்கு எவரிடமும் உடல் வலு இருக்கவில்லை. அழவும் முடியாத அவலநிலை! என்ன செய்வது! எல்லோரையும் மரண அச்சம் ஆட்கொண்டிருக்கின்றது. பெரிய சத்தமில்லாது செபமாலை ஓதுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

நள்ளிரவு: 12.00 மணி

செபமாலை சொல்லியபடி தூக்கத்துடன் போராடுகின்றேன். சரியாகக் களைத்து விட்டேன் போல் தெரிகின்றது.

நள்ளிரவு: 01.00 மணி

ஆழ்ந்த உறக்கம் இல்லை. நான் எழும்ப முனையும் போதெல்லாம், யாரோ தலையில் அடிப்பது போன்ற உணர்வு.

நள்ளிரவு: 02.00 மணி

உறக்கத்தில் அம்மாவைக் காணுகின்றேன். கறுப்பு உடை அணிந்த பெண் துறவி போல் எனக்குக் கைகளைக் காட்டுகின்றார் அவளது முகம் வாடியிருக்கின்றது. அவளது அன்பான கரங்களைப் பற்றி, ஏன் வாடி இருக்கின்றீர்கள் என்று கேட்பதற்கு முயற்சிக்கின்றேன். முடியவில்லை! மீண்டும் தலையில் யாரோ பலமாக அடிக்கின்றார்கள்.

நள்ளிரவு: 03.00 மணி

நல்ல உறக்கம். உலகம் முழுவதும் அதிர்ந்து உருண்ட வண்ணம் என்னையும் என்னுடன் நின்றவர்களையும் (யார் யார் என அடையாளம் காண முடியவில்லை) நிலைகுலையச் செய்கின்றது. உலகத்தின் முடிவோ? மீண்டும் தலையில் யாரோ பலமாக அடிக்கின்றார்கள். எழும்ப முயற்சிக்கின்றேன் இன்னும் நான் உயிரோடு தான் இருக்கின்றேன்.

விடியல்: 04.00 மணி

எழும்ப முடியாத உறக்கம். கனவு! கறுப்புக் கொடி பிடித்த சிலர் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் யார் யார் என அறிவது கடினமாய் உள்ளது! சற்று உற்று நோக்கும் பொழுது, அவர்கள் எனது சகோதரர்கள் போல் தெரிகின்றது. நித்திலா அக்கா, சக்தி அண்ணன், சூரிய ஜீவன் அண்ணன் இன்னும் பலர் கறுப்புக் கொடியை அசைத்த வண்ணம் என்னை நோக்கி வருகின்றார்கள். மரினா அக்கா மட்டும் வழமையான புன்சிரிப்பின்றி தனது சபையின் வெள்ளை உடுப்புடன் வந்து கொண்டிருக்கின்றாள். அவர்கள் அனைவரையும் அண்மிக்க முயல்கின்றேன். முடியவில்லை! அப்படி முயலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு குழிக்குள் விழுகின்றேன். எழுந்து பார்க்கும் பொழுது யாரையும் காணவில்லை. மீண்டும் தலையில் யாரோ அடிக்கின்றார்கள். திடுக்கிட்டு எழும்புகின்றேன்.

வைகறை: 05.00 மணி

உறக்கத்தில் மீண்டும் கனவு. புனித முடியப்பரைச் சுற்றி எதிரிகளின் கூட்டம்! சரமாரியாகக் கற்களை அவர் மேல் வீசுகின்றார்கள். தனது எதிரிகளை மன்னித்துக் கொண்டே வானத்தை மேல் நோக்கிப் பார்க்கின்றார். நானும், அவருடன் சேர்ந்து வானத்தைப் பார்க்கின்றேன். என்ன காட்சி! மிகப் பெரும் ஒளி! அந்த ஒளியின் நடுவில் ஓர் உருவம். அதைப் பார்ப்பதற்கு கோடிக் கண்கள் வேண்டும். முடியப்பர், அக்காட்சியில் பரவசமாகிய கோலத்தில், எதிரிகளின் தாக்குதலின் விளைவாக உயிரைத் துறக்கின்றார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய தலையில் மீண்டும் யாரோ அடிக்கின்றார்கள். திடுக்கிட்டு எழும்புகின்றேன். எனது வலது கை செபமாலையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் உறங்கியிருக்கியிருப்பேன் போல் தெரிகின்றது. எனக்கு அருகில் அருட்தந்தை ஒருவர் வந்து, “என்ன சரா! அடிக்கடி திடுக்கிட்டு எழும்புவதும்,பின்பு படுப்பதுமாகவே இருந்தீரே! எழும்பும் ஒவ்வொரு முறையயும் குழிக்கு மேலே போடப் பட்டிருந்த மரக் குற்றியில் தலை அடிபட்டது. நோ ஏதாவது இருக்கிறதா என்று பாரும் எனப் பரிவுடன் கூறுகின்றார்.

காலை: 06.00 மணி

வெளியே சற்று அமைதி நிலவுகின்றது. இருள் இன்னும் முற்றாக நீங்கவில்லை. எம்மோடு இருந்த சிலர் வெளியே செல்கின்றார்கள். காலைக் கடனை முடிப்பதற்கு செல்கின்றார்கள் போலும். சற்று நேரத்தின் பின்பு, குடி நீரும் அள்ளிக் கொண்டு வருகின்றார்கள்.

காலை: 07.00 மணி

பொழுது விடிந்து விட்டது. பதுங்கு குழிக்குள் இருந்த எல்லோரும் சற்று நிம்மதியுடன் காணப்படுகின்றனர். பக்கத்துப் பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு சிலர் வெளியில் நடமாடுகின்றார்கள். பல நாட்கள் உணவும், நீண்ட இரவுகள் உறக்கமும் இல்லாது களைத்திருந்தது அவர்களுடைய உடல் அசைவுகளில் தென்பட்டது. அவர்களது முகங்களிலும் கொட்டை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த சோகத்தைக் காணமுடிகின்றது.

காலை: 08.00 மணி

யாழ் ஆயருக்கும் மன்னார் ஆயருக்கும், நாம் இருந்த இடத்திலேயே உயிருடன் இருக்கின்றோம் என்னும் செய்தியை, தொலைபேசி ஊடாக அறிவிக்கின்றோம். அதற்கு மன்னார் ஆயர் அழுகையுடன் தெரிவித்த பதில் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தது: “நாம் எல்லா முயற்சிகளையும் எடுத்து விட்டோம். நீங்கள் எங்கு எந்நிலையில் உள்ளீர்கள் என்பதை எல்லா மட்டத்திலும் அறிவித்து விட்டோம். படை அதிகாரிகள், அரச அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கின்றோம். மனம் தளர வேண்டாம். கடவுளை மன்றாடிக் கொண்டிருங்கள். அவர் தான் உங்களை இனிக் காப்பாற்ற முடியும்”. அச்செய்தியைப் பற்றி நாம் எமக்குள் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, கடற்கரைப் பக்கமாக இருந்து படையினர் இருவர் எமது பதுங்கு குழியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். முன்னைய படையினரைப் போல் துப்பாக்கி ஏந்தி இருந்தும், எங்களை நோக்கியோ வானத்தை நோக்கியோ சுடாமல், எமது பதுங்கு குழியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். மிக அருகில் வந்து, “நீங்கள் குருக்களா?” என வினவுகின்றனர். நாம் அச்சம் தணிந்தவர்களாக தலையாட்டுகின்றோம். படைத்தளபதி ஒருவர் தம்மை அனுப்பியதாகவும் எங்களைத் தேடியே வந்ததாகவும் கூறுகின்றார்கள். அத்துடன் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கின்றனர்: “வெளியிலே நடமாட வேண்டாம.; கண்ட இடத்தில் சுடுவதற்கு இராணுவத்தினருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களைக் கண்டாலும் சுடுவார்கள். நாம் திரும்பி படைத்தளபதியிடம் சென்று நீங்கள் தங்கியிருக்கும் சரியான இடத்தை தெரியப்படுத்துவோம். உங்களை நாம் வந்து அழைத்துச் செல்லும்வரை நீங்கள் வெளியே செல்ல வேண்டாம்”.

காலை: 09.00 மணி

இனம் தெரியாத நிம்மதி! விரைவாக எமது சிலுவைப் பயணம் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையின் ஒளி அனைவர் முகங்களிலும் வீசத் தொடங்குகின்றது. இடத்திற்கிடம் மாறிச் சென்ற பொழுது எம்மிடம் இருந்த பொருட்கள் பலவற்றை கைவிட்டு வரவேண்டிய கட்டாயம் இருந்தது. இப்பொழுது, எம் ஒவ்வொருவரிடமும் ‘எம்முடையது’ என எஞ்சியிருந்த அற்ப சொற்பத்தை; தேடி ஒன்று சேர்த்து ஒரு பொதிக்குள் போட்டுக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றோம்… ஏனோ தெரியவில்லை நேரம் மெல்ல மெல்ல அரக்கிக் கொண்டு இருக்கின்றது. “உள்ளே இருங்கள். நாங்கள் வந்து உங்களை அழைத்துச் செல்வோம்” என ஆறுதல் மொழி கூறிச்சென்ற படைவீரர் எவரும் இன்னும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழும்புகின்றது. அக்கேள்வி, மணித்துளிகள் செல்லச் செல்ல, ஏமாற்ற உணர்வாக எம்மில் துளிர்விடுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்;, நல்லதே நடக்கும் என்று ஒரு புறமும், பல்லாயிர மக்களுக்கு நடந்ததுதான் நம்முடைய விதியும் என்ற அச்சம் மறு புறமும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்த்து எதிர்பார்த்து நிம்மதி இழந்தவர்களாக எம்முள் பலரும் மாறுகின்றனர். நானும் அதற்கு விதிவிலக்கு அன்று.

பகல்: 10.00 மணி

சடுதியாகக் கிளம்பிய துப்பாக்கிகளின் வெடிச் சத்தம் எம்மைச் சூழ நிலவிய மயான அமைதியைக் குலைக்கின்றது. எம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பதுங்கு குழிகளையும் படையினர் சூழ்ந்து கொண்டார்கள் போல் தெரிகிறது. எம்மவருள் ஒருவர் மிக அவதானமாக நடுக்கத்துடன் வெளியே தலையை நீட்டிக் கண்ணோட்டமிடுகின்றார். அவருடைய முகம் கறுக்கின்றது அதில் அச்ச உணர்வு தென்படுகின்றது. தடுமாற்றத்துடன், “கறுப்புத் துணியை முகத்தில் அணிந்த படைப்பிரிவினர் சுற்றி வளைத்து நிற்கின்றார்கள.; இனிச் செபம்தான் எமது ஒரே தஞ்சம்” எனக் கூறுகின்றார். கறுப்புத் துணியால் முகத்தை மூடிப் போரிடும் படையினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது கையிலுள்ள செபமாலையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறேன்.

பகல்: 11.00 மணி

எம்முள் ஒரு சிலர் மரண அச்சத்தில் உறைந்திருந்தனர். நாம் நம்பிக்கையை இன்னும் இழந்து போகவில்லை. தாமதிக்காது தீர்க்கமான முடிவை நாம் எடுக்க வேண்டும். “வெள்ளைக் கொடியுடன் வெளியே சென்று படையினருடன் பேசிப் பார்ப்போம்”. அவ் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட எமக்குள், யார் யார் வெளியே சென்று பேசுவது என்பதில் முரணான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. வெளியில் சென்றால், படையினர் கேட்டுக் கேள்வியின்று சுட்டுக் கொல்வார்கள் என்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருப்பதுதான் கருத்து வேற்றுமைகளுக்குக் காலாக இருந்தன. அரைமணி நேரத்துக்கும் மேலான வாத விவாதங்களுக்குப் பின், ஒரு அருட்தந்தை, “நான் செல்வதற்குத் தயார்” என்கின்றார். அமைதி! பேசுவதற்கு எல்லோரும் தயங்குகின்றனர். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு “நான் வரமாட்டேன்” என்கின்றார் ஒருவர். ஒரு சிலர் “நான் போகமாட்டேன்” என்று தனித்தனியாக முணு முணுக்கின்றனர். “உங்களுடன் நானும் வருகின்றேன்” என்றேன் நான். இந்தத் துணிவு, எனக்கு எங்கிருந்து வருகின்றது? என் கைகளில் இருந்த செபமாலைதான் தருகின்றது என எண்ணுகின்றேன். வெள்ளைக் கொடியை ஏந்திய வண்ணம் பதுங்கு குழியை விட்டு நாம் இருவரும் செல்கின்றோம். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்திய வண்ணம் படையினர் எம் இருவரையும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். முகங்களை மூடிய இத்தனை படையினரும் எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியவில்லை. நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது மட்டும் விளங்குகின்றது. புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்து சமயத் தலைவர்களுக்கும் மதிப்பளிப்பவர்கள் என்பது உறுதியாகின்றது. எமக்கு எத் தீங்கும் இழைக்கவில்லை. பதுங்குக் குழிக்குள் இருந்த அனைத்து அருட்தந்தையர்களும் வெளியே வர பணிக்கப்படுகின்றனர். அவர்கள் வெளியே வருகின்றார்கள். படையினர் மத்தியில் பதற்றம் ஏதும் இல்லை. அருட்தந்தையர்களைத் தொடர்ந்து, பதுங்கு குழியில் இருந்த சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வெளியே வர, படையினர் மத்தியில் குழப்பம் ஏற்படுகின்றது. போராளிகள் தான் வருகின்றார்கள் என்று படையினர் கணிப்பது போல் தெரிகின்றது. நாம் நின்ற நின்ற இடத்திலேயே முழந்தால் படியிட பணிக்கப்படுகின்றோம். ஆண்கள் அனைவரும் தத்தமது மேலாடைகளை அகற்றி விடும்படி கடும் தொனியிலான கட்டளை பிறக்கின்றது. மேற் சட்டைகளை கழற்றியபடி அனைவரும் கைகளை உயர்த்திய வண்ணம் முழந்தால் படியிட்டு இருந்த காட்சி, எம் சிலுவைப் பாதையில் பதினான்கு நிலையினுள் ஒன்று போலும். படையினரிலும் பல் வகைப்பட்ட மனிதர்கள் இருக்கின்றனர். முரட்டுத்தனமான ஒருவர், அருட்தந்தை ஒருவரின் அருகே வந்து, துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டபடி, “நீ ஒரு எல்.ரி.ரி.ஈ, துவக்கு ஏந்தி சண்டை பிடித்த நீ, தோத்துப் போய், துவக்கை எறிந்து விட்டு வெள்ளை அங்கியுடன் நிக்குறாயா?” அவன் அப்படிச் சொல்வது தனது கடமை உணர்ச்சியாலோ என்னவோ! ஆனால், அவனை யார் தான் தட்டிக்கேட்க முடியும். கடும் தொனியில் ஒருவன் சீறிச் சினந்து கத்திக்கொண்டிருக்கின்றான். அவனுக்கு அருட்தந்தை ஒருவர் தன்னிடமிருந்த சி.டி.எம்.ஏ தொலைபேசியைக் காட்டியபடி அவனுடைய மேலதிகாரியோடு அவனைப் பேச வைப்பதற்காக முயற்சி மேல் முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். விநாடிகள் நகர நகர அவருடைய முயற்சி பலனளிக்கின்றது. அவன் அவரிடம் மூன்று வினாக்களை எழுப்புகின்றான்:

– நீ கூறும் ப்றிகேடியரின் பேர் என்ன?
– அவர் இப்ப எங்கை இருக்கிறார்?
– அவற்ற இலக்கம் உனக்கு எப்பிடித் தெரியும்?

மிகுந்த கோபத்துடன் எழுப்பப்பட்ட கேள்விகள் சிங்களத்திலும் அரைத் தமிழிலும் கேட்கப்பட்டன. அவ்வேளை, “எல்லாரையும் சுட்டுக்கொல்ல எங்களுக்கு ஓர்டர் நீங்கள் எல்லாரும் எல்.ரி.ரி.ஈ, உங்க எல்லாரையும் சுட்டுக்கொல்லப் போறம்” என இன்னுமொரு படைவீரன் அச்சுறுத்துகின்றான். சுட்டுப் பொசுக்கும் வெயிலுக்குச் சமனான தொனியில் படையினர் அப்படி நடப்பது அவர்கள் கடமையின் தர்மம் போலும்!

மதியம் 12.00 மணி

படையினரில் ஒரு பகுதி, சற்றுத் தள்ளி அக்கம் பக்கம் சென்று, காயம் அடைந்தவர்களையும் களைத்து இழைத்துப் போய் இருந்தவர்களையும் அழைத்து வந்து எம்முடன் சேர்த்துவிடுகின்றனர். நீண்ட நேர கெஞ்சலுக்கும் கார சாரமான பதிலுக்கும் பின் ஒரு படைவீரன் தொலைபேசி ஊடாகப் படையதிகாரியோடு பேச இணக்கம் தெரிவித்து அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, நாம் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். நீண்ட நேரம் அங்கு நிலவிய கொதி நிலை சற்றுத் தணிந்து கொள்கின்றது. இருப்பினும், படையினரின் கடுங்கோபம் அடிக்கடி வெடிக்கின்றது. அருட்தந்தையர்கள் அனைவரும் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றோம். எம் குழுவில் இருந்த பெண்களை உடற்சோதனை செய்ய ஒரு பெண் பணிக்கப்பட்டு, இராணுவத்தினரின் முன்பாகவே அச் செயல் நடைபெறுகின்றது.

பிற்பகல்; 01.00 மணி

ஐந்து வயதுச் சிறுவர் தொடக்கம் அறுபது வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வரை எம்முடன் இருந்தனர். எல்லோருடைய கழுத்திலும் செபமாலை போடப்பட்டிருந்தது. கோபத்தில், ஒரு சில படையினர், அச்செபமாலைகளை அறுத்து எறிகின்றனர். காயப்பட்டவர்களின் காயங்களை உரித்துக் கடுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர். அச்சோதனைகளின் பின் பதுங்கு குழியிலிருந்து எமது பொதிகளை எடுத்து வர நாம் அனுமதி கோருகின்றோம். படையினரும் உடன்படுகின்றனர். நன்றி கலந்த உள்ளத்தோடு, எமது சிறிய பொதிகளை நாம் எடுத்து வர, ஒவ்வொரு பொதியும் அவிழ்க்கப்பட்டு அதற்குள் இருந்த பொருட்கள் மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. நான் என்னுடைய பொதியை எடுத்துக் கொண்டு அருட்தந்தை ஒருவருக்குப் பின்னால் வந்து நிற்கின்றேன். சடுதியாக எதிர்பார்க்க முடியா வகையில் சினத்துடன் காணப்படும் படைவீரன் ஒருவன் எனக்கு கிட்டே வந்து எனது நெஞ்சில் பலமாகக் குத்துகின்றான். அதிர்ச்சியுடன் மூர்ச்சையற்றுக் கீழே விழுகின்றேன். எல்லாம் இருண்டது போல் தோன்றுகின்றது. அடியின் வேகம் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றதோ? யாரோ ஒருவர் என்னைத் தூக்கி எழுப்புகின்றார். இப்போது தான் எனக்கு உணர்வு வருகின்றது. கீழே குனிந்து என்னைத் தூக்கியவர் ஒரு அருட்தந்தை! எழும்பும் போதே நெஞ்சு வலி அதிகமாக இருப்பதை உணர்கின்றேன். பலத்த அடி நெஞ்சில். ஈட்டியால் குற்றியது போன்ற அடி எனது சாவிற்கு முன்னறிவித்தலோ? இல்லை. இல்லை… ஏனோ என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அப்போதுதான்,; நான் அணிந்திருந்த கண்ணாடியும் என்னுடைய பொதிக்குள் இருந்த பொருட்களும் நிலத்தில் சிதறியிருப்பதை மங்கலாகப் பார்க்கின்றேன். அவ்வேளை ஒரு படையதிகாரி எனக்கு அருகில் வருகின்றார். இன்னுமொரு அடி விழப்போகின்றதோ! என்ற ஏக்கத்துடன் அவரைப் பார்க்கின்றேன். அப்படி விழுந்தால் நான் செத்து விடுவேன் என்ற அச்சம் என்னை நிலை தடுமாறச் செய்கின்றது. எனக்கு மிக அருகில் வந்த அந்த அதிகாரி, என்னிடம் மன்னிப்புக் கேட்கின்றார். அதுமட்டுமல்ல, என்னைத் தாக்கிய படைவீரனையும் கடுமையாகக் கடிந்து கொள்கின்றார். இது கனவா அல்லது உண்மையாகத்தான் நடக்கின்றதா? இயேசுவின் கல்வாரிப் பயணம் என் நினைவுக்கு வருகின்றது. இயேசுவைக் கன்னத்தில் அறைந்த பொழுது, தட்டிக்கேட்க ஒரு நிக்கோதேமு இருந்தார். இயேசுவைக் கற்றூணில் அடிக்கவும் சிலுவையைச் சுமக்கவும் அச்சிலுவையில் அறையப்படவும் ஆணையிட்டவன் ஒரு அரசியல் வாதி. இயேசுவுக்கு நடந்த எக்கொடிய செயலையும் எவ் அதிகாரியும் கண்டிக்கவில்லை. ஆனால் எனக்கு நடந்த நிகழ்வுக்காக படையதிகாரி ஒருவர் மன்னிப்புக் கோருகின்றார். இத்தகைய மாண்பு மிக்க பண்பாளர்கள் இருக்குமட்டும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கும். படையினரின் அனுமதியுடன், நாம் இருந்த பதுங்கு குழிக்குள் இறந்து போயிருந்த முகுந்தன் ஆசிரியரின் உடலையும், இரு நாட்களுக்கு முன்; குண்டுபட்டு இறந்திருந்த றோய் என்பவரின் சடலத்தையும், இரு வேறு கிடங்குகளுக்குள் அடக்கம் செய்கின்றோம். “காயப்பட்டவர்களை ஏலுமானால் நீங்களே கூட்டிப் போங்கள்” எனப் படையினர் எம்மிடம் கூற, நாமும் உடனடியாகவே நமக்குக் கிடைத்த தடிகள், சாக்குகளைப் பயன்படுத்தி சில தூக்கிகளைச் செய்து, ஒரு சிலரை மட்டும் அங்கிருந்து எம்முடன் கொண்டு வர முடிகின்றது. மற்றவர்களை என்ன செய்வது? இக்கட்டான சூழ்நிலை! காயப்பட்டுக் கிடந்த சிலர் எமது சங்கடத்தை உணர்ந்து, “எங்களால் நீங்கள் சிரமப்பட வேண்டாம் எங்களை விட்டு விட்டு நீங்கள் போங்கள்” எனக் கூறுகின்றனர். அவர்களை அங்கே விட்டுச் சென்றால் அவர்களுக்கு என்னாகுமோ என்ற அச்சம் எம்மை ஆட்கொள்கின்றது. ஆயினும், படையினர் எம்மை இரண்டு குழுக்களாகப் பிரித்து, தம்முடன் நடந்து வரச் சொல்லுகின்றனர். வேறு வழியின்றி நாம் போகின்றோம். முள்ளிவாய்க்கால் பிரதான வீதி மட்டும் போகின்றோம். நான் காணும் அவலக் காட்சிகள் எனக்குச் சோகத்தையும் களைப்பையும் தருகின்றன. குடும்பம் குடும்பமாக இறந்து போய்க் கிடக்கும் மக்கள்;! உடலுறுப்புக்கள் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுச் சிதறிக்கிடந்த சடலங்கள்! பற்றி எரியும் நிலையில் வாகனங்கள்! வாகனங்களுக்கு அடியில் அரைகுறையாக எரிந்து போன சடலங்களும், சிதைந்து போன சதைத் துண்டங்களும், தேடுவாரற்று கிடந்த துப்பாக்கிகளும், வெடிக்காமல் கிடந்த குண்டுகளும், நரகத்துக்குள் நடப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றது. படைவீரன் ஒருவன் பாதையோரத்தில் விழுந்து கிடந்த காயப்பட்ட போராளியின் நெற்றியில் துப்பாக்கி முனையை வைத்துக் கோபமாக ஏதேதோ கூறிக்கொண்டிருந்த காட்சி! தனிப்பட்ட துப்பாக்கி வெடிகளின் சத்தம். இலக்கிய வகுப்பில் எனது ஆசிரியர் புறநானூற்று போர்க் காட்சிகளை பற்றிக் கூறியது நினைவுக்கு வருகின்றது. எங்கு பார்த்தாலும் நெருப்பின் மயம்! இனிமேல் இங்கு மக்கள் வாழ முடியுமா? பேய்கள் மட்டும் தான் நடமாட முடியும். அனைத்தும் சேர்ந்து எனது நெஞ்சில் பேரதிர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் வெறும் கால்களுடன் நடந்து கொண்டிருக்கின்றபடியால் எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நெருப்புத் தளங்கள் எமது வெறும் கால்களைப் பதம் பார்க்கின்றன. நடக்கவே முடியவில்லை. எனக்குச் சோர்வு ஏற்படுகின்றது. அருட்தந்தை ஒருவர் கட்டாயப்படுத்தி எனது உடுப்புப் பொதியை என்னிடம் இருந்து பெற்று, நடக்க முடியாமல் திண்டாடும் என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வருகின்றார். மேலும், அன்பகச் சிறுவர் இருவரை எனக்கு உதவி செய்யும் படி பணிக்கின்றார். எனது உடலில் உள்ள சோர்வு போன்றே உள்ளத்திலும் ஏற்படுகின்றது. அப்படி இருந்தும், உதவி செய்த அந்த அருட்தந்தையிடம் சொல்லுகின்றேன், “என்னால முடியும், நான் தனிய நடந்து வருவன்”. எனக்குப் புரிகின்றது இனிமேல் என்னால் நடக்க முடியாது என்று. எரிதணலாக வெந்து கொண்டிருக்கும் இப்பாதையில் படுத்து உறங்க வேண்டும் போல் தோன்றுகின்றது. அவ்வளவு களைப்பு. ஆனால் இரண்டு அன்பகச் சிறுவர்களும் வானதூதர்களைப் போல் என்னை ஏந்திக்கொண்டு வருகின்றார்கள். நாம் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் இப்பொழுது படையினரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. சடுதியாக படையினர் எல்லோரும் வானத்தை நோக்கி துப்பாக்கிகளை உயர்த்தி, பெருமிதத்துடன் வேட்டுக்களை தீர்த்துக்கொண்டிருக்கின்றனர். எதுவோ ஒரு முக்கியமான செய்தி அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என எண்ணுகின்றேன். நடை பிணங்களாகச் சென்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து, “உங்கட தலைவர் அவுட். செத்துப் போனார். இனிமேல் நீங்கள் எங்கட அடிமைகள்” என்று வெறுப்புடன் எம்மைப் பார்த்து உரக்கக் கத்துகின்றார்கள். ஒரு சிலர் காறித் துப்புகின்றார்கள். படைவீரன் ஒருவன் எனக்கு அருகில் வந்து, “டே மொட்டையா, உன்ர தலைவர் எங்க? செத்திட்டார்! நீ இனி அடிமை” என்று கூறுகின்றான். எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது. நான் எவ்வாறு அடிமையாக முடியும்? இயேசுவின் அடியவன் நான், எவ்வாறு மனிதருக்கு அடிமையாக முடியும்! என்னுடைய முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியைப் பார்த்த ஒரு அருட்தந்தை, “சரா! இதெல்லாம் பொய்! நீ நம்பியிடாத நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை” என்கின்றார். ஒரே குழப்பமாக இருக்கின்றது. நான் அடிமையாவதா? யார் அடியவனாக என்னை அழைத்தாரோ அவரிடம் செல்வது தான் மேல், என் உடல் எல்லாம் அதிகமாக வியர்க்கின்றது. அயர்வும் ஏற்படுகின்றது.

பிற்பகல் 02.00 மணி

முள்ளிவாய்க்காலுக்கு வெளியே ஒரு பெரிய மரத்தின் கீழ் எல்லோரும் வந்து சேர்ந்து நிற்கின்றோம். நா வரளுகின்றது! தண்ணீருக்கு தவிக்கின்றது! எனக்கு மயக்கம் வருகின்றது! என்னை அழைத்தவரின் குரல் காதுகளில் தூர ஒலிக்கின்றது.

பின்னுரை

மரத்தின் கீழ் இருந்தவர்களுடைய அவல நிலையைப் பார்த்து தண்ணீர்ப் போத்தல்கள், பழவெல்லம் (குளுக்கோஸ்) பிஸ்கட் முதலியவற்றைக் கொடுத்தார்கள். தண்ணீர் மற்றும் பழ வெல்லம் பருகியவர்கள் தெம்பு பெற்று எழுந்தனர். ஆயின், பல முயற்சிகள் எடுத்தும் இருவருக்கு மட்டும் எந்த உதவிவும் செய்ய முடியவில்லை. அதில் ஒருவர்; அருட்தந்தை சரா. 
நிலைமையைப் புரிந்து கொண்ட மற்ற அருட்தந்தையர்கள், மயக்க நிலையில் இருந்த இருவரையும், இன்னும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட சிலரையும் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்படி இரந்து கேட்டதன் பயனாக 
ஒரு உழவு இயந்திரத்தில் இரட்டை வாய்க்காலில் உள்ள சாளம்பன் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. அரை மணி நேரம் கழித்து அதிகாரி ஒருவர் அங்கு வந்த போது, 
எல்லோரும் அவரின் காலில் விழுந்து அழுது, அவ்விருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கெஞ்சிக் கேட்டனர். அதிகாரியும், மூர்ச்சித்து மயக்க நிலையில் கிடந்த இருவருக்கும் 
உடனடியாக ஊசிகள் ஊடாக குளுக்கோஸ் ஏற்றுவதற்கு கடும் முயற்சி எடுத்தார். அவ் அதிகாரியின் முயற்சியால் இருவர் உடலிலும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஆயினும், சாளம்பனில் சராவின் மூச்சு நின்றுவிட்டது. அவரின் மூச்சு அடங்கிய அந்தக் கணப்பொழுது கிட்டத்தட்ட

பிற்பகல் 2.45.

“என்னால முடியும்,
நான் தனிய நடந்து வருவன்”.
மறக்க முடியா இச்சொற்களே
துறவி சராவின் இறுதிப் பேச்சு.
நடக்க முடிந்தது அவரால்
இறைவன் திருவடி நிழலுக்கு
நிரந்தர விடுதலை தேடி!

By admin