புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்

cq5dam.thumbnail.cropped.750.422இன்றைய உலகில் துன்புறும் அனைவரும் சுமந்து செல்லும் சிலுவைகளில் இயேசுவின் சிலுவையைக் காணும் வரத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் கூறினார்.

உரோம் நகரின் கொலோசெயம் திடலில், வெள்ளி இரவு, 9.15 மணிக்குத் துவங்கிய சிலுவைப்பாதையை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, அந்த பக்தி முயற்சியின் இறுதியில் கூறிய செபத்தின் தமிழ் மொழியாக்கம் இதோ:

ஆண்டவராகிய இயேசுவே, உலகின் அனைத்து சிலுவைகளிலும் உமது சிலுவையைக் காண எங்களுக்கு உதவியருளும்:

தங்கள் உணவுக்காகவும், அன்புக்காகவும் பசித்திருப்போரின் சிலுவை;

தங்கள் பிள்ளைகளாலும், குடும்பத்தினராலும் தனிமையில் விடப்பட்டோரின் சிலுவை;

நீதிக்காகவும், அமைதிக்காகவும் தாகம் கொள்வோரின் சிலுவை; நம்பிக்கை கொள்ள இயலாதோரின் சிலுவை;

வயது முதிர்ச்சி, மற்றும் தனிமையின் பாரத்தால் குனிந்திருப்போரின் சிலுவை;

அச்சத்தால் மூடப்பட்ட கதவுகளையும், அரசியல் கணக்குகளால் பூட்டப்பட்ட இதயங்களையும் காணும் புலம்பெயர்ந்தோரின் சிலுவை;

தங்கள் அப்பழுக்கற்ற, தூய்மையான நிலையில் காயமடைந்துள்ள சிறியோரின் சிலுவை;

உறுதியற்ற நிலை மற்றும் நொடிப்பொழுது கலாச்சாரம் என்ற இருளில் அலைந்து திரியும் மனிதகுலத்தின் சிலுவை;

காட்டிக்கொடுக்கப்படுவதாலும், சுயநலத்தாலும் உடைந்துபோயிருக்கும் குடும்பங்களின் சிலுவை;

உமது ஒளியை இவ்வுலகிற்கு கொணரும் முயற்சியில் அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டிருக்கும் அர்ப்பணிக்கப்பட்டோரின் சிலுவை;

தங்கள் துறவு வாழ்வின் பாதையில், ஆரம்ப அன்பையும, ஆர்வத்தையும் தொலைத்துவிட்ட அர்ப்பணிக்கப்பட்டோரின் சிலுவை;

உம்மை நம்பி, உமது வார்த்தையின்படி நடக்க முயன்று, மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுள்ள உமது குழந்தைகளின் சிலுவை;

எமது பலவீனம், காட்டிக்கொடுத்தல், வெளிவேடம், பாவம், உடைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகிய சிலுவை;

நற்செய்திக்கு பிரமாணிக்கமாக இருப்பதன் வழியே, திருமுழுக்கு பெற்றவரிடமும் உமது அன்பை எடுத்துச் செல்ல முயல்வதில் போராடிவரும் உமது திருஅவையின் சிலுவை;

உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தாக்குதலைச் சந்திக்கும் உமது மணமகளான திருஅவையின் சிலுவை;

பேராசை, அதிகாரம் ஆகியவற்றால் பார்வை இழந்த எமது சுயநலக் கண்கள் முன்னே, ஆபத்தான முறையில் அழிந்துவரும் எமது பொதுவான இல்லத்தின் சிலுவை – ஆகிய அனைத்து சிலுவைகளிலும் உமது சிலுவையைக் காண எங்களுக்கு உதவியருளும்.

ஆண்டவராகிய இயேசுவே, அனைத்து தீமைகளுக்கும், அனைத்து மரணங்களுக்கும் எதிராக நீர் அடைந்துள்ள உறுதியான வெற்றியிலும், உயிர்ப்பிலும், எங்கள் நம்பிக்கையை மீண்டும் தூண்டியருளும்.  ஆமென்.

Your email address will not be published. Required fields are marked *