இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் 79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு 5, 6, 7ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆயரும் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயருமான பேரருட்தந்தை அன்ரன் றஞ்சித் அவர்களும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளன இயக்குனர் அருட்தந்தை கெலன பீரிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இலங்கையின் 12 மறைமாவட்டங்களிலிருந்தும் 150 வரையான இளையோரும் அவர்களுக்கு பொறுப்பான மறைமாவட்ட இயக்குநர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கருத்துரைகளும் குழுச்செயற்பாடுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன் “பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்
இளையோரின் கடமைகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பங்குகொண்ட இளையோர்கள் மணற்காடு பிரதேசத்திற்கு களஅனுபவம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர்.
05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து நடைபெற்ற மீளாய்வுடன் நிறைவடைந்தது.

By admin