யாழ் மறை மாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் பணித்தள மையமான மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்டத்தில் ஊடகப்பணிக்கென தனிப்பட்ட பணித்தளம் ஒன்று இல்லாத நிலையில் அப்பெரும் குறையை நீக்க ஆயர் அவர்களின் பெரும் முயற்சியில் ஓர் புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் 2018ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. யாழ் பிரதான வீதியில் அழகுற அமைக்கப்பட்ட இவ் மறைநதி ஊடக மையத்தில் தற்கால நவீன இலத்திரனியல் ஊடக சாதனங்கள் அடங்கலாக ஒலி , ஒளி பதிவுகளை நவீன முறையில் மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எமது மறை மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் யாழ் மறை அலை யூரியுப் தொலைக்காட்சி, யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடகம் முகநூல் மற்றும் யாழ். மறைமாவட்ட இணையத்தளம் என்பனவற்றின் செயற்பாட்டு மையமாக எதிர்வரும் காலங்களில் , மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் அமையும்.
மறைநதி ஊடக மையத்தின் உள்ளக கட்டமைப்புக்கள் தொழிநுட்ப வடிவமைப்புக்கள் என்பன யாழ் மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணையகத்தின் இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் அயராத உழைப்பின் வெளிப்பாடாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். யாழ் மறை மாவட்டத்தின் ஊடக மையத்தின் உதயம் மறைமாவட்ட வளர்ச்சியின் ஓர் படிக்கல்லாக அமைந்துள்ளது.

By admin