மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலியை சிறப்பிக்கும் முகமாக மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டதை தொடர்ந்து தற்போது யாழ். மறைமாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்டம் தேவன்பிட்டியிலிருந்து எடுத்துவரப்பட்ட மடு அன்னையின் திருச்சொருபம் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களால் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களிடம் மன்னார் மறைமாவட்டத்தின் எல்லைப்புறமாக அமைந்துள்ள வெள்ளாங்குள பிரதேசத்தில் வைத்து 6ஆம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ளாங்குளத்திலிருந்து அன்னையின் திருச்சொருபம் யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருச்சொருப ஆசீர் வழங்கப்பட்டு மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
இத்திருப்பலியிலும் தொடர்ந்து அங்கு நடைபெற்ற வழிபாடுகளிலும் ஆயிரக்கனக்கான மக்கள் கலந்து அன்னையை தரிசித்து ஆசீர் பெற்றுச்சென்றனர். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து அன்னையின் சொருபம் புனித மடுத்தீனார் சிறய குருமடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடு இடம்பெற்றது.
தொடர்ந்து பாண்டியன்தாழ்வு, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடுகளும் தொடர்ந்து மக்கள் தரிசிப்பிற்காகவும் வழிபாடுகளுக்காகவும் மணியந்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி, குருநகர் புனித அந்தோனியார் ஆலயம், பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம், யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயம், புனித யுவானியார் ஆயலம், நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயம் ஆகிய இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இச்சொருபம் யாழ். மறைக்கோட்ட பங்குகளை தரிசித்த பிற்பாடு ஏனைய மறைக்கோட்டங்களுக்கும் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

By admin