மரியன்னையை மாதிரியாகக் கொண்ட வாழ்வே செபமாலைக் கன்னியர்களின் அழைப்பு என செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடரில் கலந்து கொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை தோமஸ் அவர்களால் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடர் இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை வசாவிளான் செபமாலைக் கன்னியர் சபை தலைமை ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபையின் எதிர்காலம் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
அருட் சகோதரி மேரி ஹெலனா அவர்கள் சபையின் தலைவியாகவும் அருட்சகோதரி ரோஸ்மேரி அவர்கள் உப தலைவியாகவும் அருட்சகோதரிகள் மேரி பெமிலா, மேரி கீதா, மேரி மாசில்லா, மேரி பவுலினா ஆகியோர் ஆலோசகர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டதுடன் இக்கூட்டதில் சபையின் ஆன்ம ஆலோசகர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றோய் அலோசியஸ் அவர்களும், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
செபமாலைக் கன்னியர் சபை யாழ். மறைமாவட்ட ஆயரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்குகின்ற ஒரு ஆழ்நிலை துறவற சபை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin