முழங்காவில் இரணைமாநகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்ந புனித செபமாலை அன்னை ஆலயத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்பு விழா கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய குருமனையை ஆயர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.
தொடர்ந்து நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு அங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்ட அன்னையின் இவ் ஆலயத்திற்கான அடிக்கல் 1996 ஆம் ஆண்டு நாட்டப்பட்டு 2003ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பங்கு மக்களின் அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து இப்புதிய ஆலயம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.