மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆவணிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்களும், குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களும், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினரென பலரும் கலந்துகொண்டனர்.
மடுத்திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டதுடன் இம்முறை ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திருவிழாவில்கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணி மாதம் 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளதெனவும் திருநாள் திருப்பலி திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறையன் உடேக்குவே அவர்களின் தலைமையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் நடைபெறவுள்ளதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.