திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின மற்றும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 60வது ஆண்டு வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வுகள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.
நிகழ்வுகளின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மன்ற பிரதான அலுவலக முன்றலில் மன்றக்கொடி ஏற்றப்பட்டு கலைத்தூது மணிமண்டபத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து இந்நாளை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட அரங்க நிகழ்வுகள் அன்று மாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றன. மன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில் வைரவிழா ஆண்டு அங்குரார்ப்பணம், கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறப்பு நிகழ்வுகளாக திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் “நஞ்சுண்ட கண்டன்” நாடகம் மற்றும் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் திரு. அன்று யூலியஸ் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட வானதூதர் மிக்கேலின் வரலாற்றை சித்தரிக்கும் ‘விண்ணக வீரன்’ வடமோடி நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டன.
வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாண பிரதேச சபை செயலர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்ற அங்கத்தவர்கள், நிர்வாக உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.