குமுதினி படுகொலையின் 39ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினிப் படகை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களுட்பட 36 பேரை வெட்டி படுகொலை செய்ததை நினைவுகூர்ந்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்திலுள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவேந்தல் குழுமத்தின் தலைவர் விசுவலிங்கம் ருத்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற
இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் இடம்பெற்றது.

அத்துடன் குமுதினி படுகொலையின் நினைவாக பசுந்தீவு ருத்திரன் அவர்கள் எழுதிய ‘உப்புக் கடலை உரசிய நினைவுகள்’ எனும் மலர் வெளியீடும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin