மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தால் மாவட்ட அளவிலான சமூகமட்ட அமைப்பு குழு உறுப்பினர்களுக்கான உளவியல் மற்றும் குடும்ப ஆலோசனை தொடர்பான கருத்தமர்வு கரித்தாஸ் வாழ்வுதய நிறுவன கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரன் செபமாலை அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சமூக உளவியல் ஆலோசகரின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் குடும்பத் தகராறுகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அதிகரித்த போதைப் பழக்கம், குறிப்பாக சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் தொலைபேசி பயன்பாடுகளின் எதிர்மறையான தாக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 75ற்கும் அதிகமானவர்கள் கலந்து பயனடைந்தனர்.
அத்துடன் வாழ்வுதய நிறுவனத்தால் வழிப்படுத்தப்படும் 283 சுயஉதவிக் குழுக்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை, உயர்நிலப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் ஏனைய சிறு வணிக முயற்சிகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார சுழல் கடன் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது.
கரித்தாஸ் வாழ்வுதய இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூகமட்ட அமைப்பு உறுப்பினர்களுக்கு சுழல் கடன் அடிப்படையில் வாழ்வாதாரத்திற்கான நிதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin