2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழினம் எதிர்கொண்ட பேரழிவில் கொல்லப்ட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்தல், மற்றும் கஞ்சி பரிமாறுபவர்களை கைதுசெய்தல் போன்றவை பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நிலைத்த சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்கான பாரிய பின்னடைவாகுமென சுட்டிக்காட்டி யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்குகிழக்கு தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் ஒரு முக்கிய குறியீடுதான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி. இதைக் குடித்து சாவிலிருந்து தப்பியவர்கள் இன்னமும் நம்மத்தியில் வாழ்கிறார்களெனவும் அவர்களது துயர அனுபவம் வருங்கால சமுதாயத்திற்கு விளக்கிப்பகிரப்பட வேண்டியதொன்றெனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என்பதை சுட்டிக்காட்டி தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்றுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் நினைவேந்தலில் பங்கெடுத்தவர்களை இரவிரவாக கைதுசெய்து தடுத்து வைத்திருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலெனவும் ஒரு பக்கத்தில் இப்படியான மீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கத்தில் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் செயற்பாடுகளையும், இனங்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளையும் முடுக்கி விடுவது சர்வதேசத்தை திருப்திப்படுத்த அரங்கேற்றப்படும் அரசின் போலி நாடகங்களேயன்றி வேறில்லையெனவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin