உதைப்பந்தாட்டம், உடற்பயிற்சி மற்றும் பழுதூக்கல் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வலிகாமம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன. மருதனார் மடச்சந்தியிலிருந்து மாணவர்கள் வரவேற்கப்பட்டு சுன்னாகம் இராமநாதன் கல்லூரி வரை அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சித்தாத்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு. கஜதீபன், வலிகாம வலய உதவி கல்விப்பணிப்பாளர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், வலிகாம உதைபந்தாட்ட கழக நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 16வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டத்தையும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்டம் மற்றும் உடற்பயிற்சிப்போட்டியில் மூன்றாம் இடங்களையும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பளுதூக்கல் போட்டியில் முதலிடம் பெற்ற செல்வன் டனுஜன் ஆகியோருக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலை உப அதிபர், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin