வத்திக்கான் புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 23ஆம் திகதி நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி திருநீற்றுப் புதனன்று தங்களைத் தீவிரமாக அர்ப்பணித்து உண்ணா நோன்பிருந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்வதற்கு அனைவரையும் ஊக்குவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதியின் அரசியாகத் திகழும் அன்னை மரியா அறிவீனத்தால் நிகழ்ந்துவரும் போரிலிருந்து உலகத்தைக் காப்பாற்றட்டும் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை காரணமாகத் தன் இதயத்தில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் தன்னைப் போலவே உலகெங்கிலும் உள்ள பலர் வேதனையையும் கவலையையும் உணர்கிறார்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் போர்களாலும் பாகுபாடான செயல்முறைகளாலும் அமைதிக்கான அனைவரின் வாழ்வும் அச்சுறுத்தப்படுகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார். மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தி நாடுகளுக்கிடையே அமைதி வாழ்வை சீர்குலைக்கும் மற்றும் அனைத்துலகச் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு செயலையும் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

By admin